கடலூரில், மோட்டார் சைக்கிள்கள் திருடிய 5 பேர் கைது - 19 இருசக்கர வாகனங்கள் மீட்பு
கடலூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 19 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன.
கடலூர் முதுநகர்,
கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் பால்சுதர், சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் முதுநகர் மணிக்கூண்டு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் ஆலப்பாக்கத்தை சேர்ந்த கருணாகரன் மகன் அப்பு என்கிற அபினேஷ் (வயது 21), நித்தியானந்தம் மகன் ரித்தீஸ்(19), கம்பளிமேடு அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டியன் மகன் ஈசமணி என்கிற கீர்த்திவாசன்(20) என்பதும், கடலூர் சிப்காட் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு வந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் கடலூர் முதுநகர், திருப்பாதிரிப்புலியூர், புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதும், அதனை ஆலப்பாக்கம் குறவன்மேட்டை சேர்ந்த ஏழுமலை மகன் தீனா என்கிற தமிழரசன், குறிஞ்சிப்பாடி விருப்பாட்சியை சேர்ந்த பாபுதீன் மகன் ஹனீப்(21) ஆகியோரிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அபினேஷ் உள்ளிட்ட 3 பேர் வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் அவர்கள் கூறிய தகவலின்படி தீனா, ஹனீப் ஆகியோரிடம் இருந்து மொத்தம் 19 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அபினேஷ், ரித்தீஸ், கீர்த்திவாசன், தீனா, ஹனீப் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.