நில சீர்திருத்த சட்ட திருத்தம்: 45 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி உள்ளோம் - வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பேச்சு

நில சீர்திருத்த சீர்திருத்த சட்ட திருத்த முடிவு மூலம் 45 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி உள்ளோம் என்று வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறினார்.

Update: 2020-06-19 00:13 GMT
பெங்களூரு, 

பெங்களூருவில் உள்ள கர்நாடக தொழில் வர்த்தக சபையில் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

கர்நாடக நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில் நிறுவனத்தினர் விவசாய நிலங்களை வாங்க முடியும். 45 ஆண்டுகளுக்கு பிறகு தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். கர்நாடக உத்யோக மித்ரா செயலி மூலம் தொழில் நிறுவனங்கள் அனுமதி பெற முடியும்.

விவசாய பணிகள்

நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்வது, வரலாற்று சிறப்புமிக்க முடிவு. அடுத்து வரும் நாட்களில் விவசாய நிலத்தை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி பெறுவது எளிமையாக்கப்படும். மேலும் சர்வே உள்ளிட்ட விஷயங்களை மேற்கொள்ளும் நடைமுறைகளும் எளிமைப்படுத்தப்படும். விவசாய பணிகள், உணவு பொருட்கள் பதப்படுத்துதல், படித்தவர்கள் கிராமங்களுக்கு சென்று விவசாயம் செய்ய, விவசாயத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்.

இவ்வாறு ஆர்.அசோக் பேசினார்.

இந்த கலந்துரையாடலின் தொடக்கத்தில் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும், சீன தாக்குதலில் உயிரிழந்த 20 ராணுவ வீரர்களின் மறைவுக்கு எழுந்து நின்று 2 நிமிடம் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக வரவேற்று பேசிய கர்நாடக தொழில் வர்த்தக சபை தலைவர் ஜனார்த்தனா, “நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு எடுத்துள்ள முடிவு, வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இதை நாங்கள் வரவேற்கிறோம். இது தொடர்பாக முன்வரும் நாட்களில் அரசு மேற்கொள்ளும் இந்த சட்ட திருத்தங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

இந்த கலந்துரையாடலில் கர்நாடக தொழில் வர்த்தக சபை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்