போடூர் வனப்பகுதியில், நாட்டு மாடுகளை வேட்டையாடும் மர்மநபர்கள் - நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
போடூர் வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்படும் நாட்டு மாடுகள் மர்மநபர்களால் வேட்டையாடப்படுவதை கண்காணித்து தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பென்னாகரம்,
பென்னாகரம் அருகே சின்னாற்றை ஒட்டி அமைந்துள்ள போடூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் 400-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நாட்டு இன மாடுகளை வளர்த்து வருகின்றனர். இவர்கள் மாடுகளை அருகில் உள்ள வனப்பகுதிக்கு ஓட்டி சென்று மேய்த்து வருகின்றனர். கடந்த 3 மாதங்களாக மர்மநபர்கள் மாடுகளை குறிவைத்து வேட்டையாடி வருகிறார்கள்.
குறிப்பாக மேய்ச்சல் முடிந்து தண்ணீர் குடிக்கும் மாடுகளை மறைந்திருந்து மாட்டின் பின்னங்கால்களை கூர்மையான கத்தியால் மர்மநபர்கள் வெட்டி விடுகிறார்கள். மாடுகள் மயங்கிய பின்னர் முன்னங்கால்களையும் தலையையும் வெட்டிவிட்டு மாட்டு இறைச்சியை வெட்டி எடுத்து சென்று விடுகிறார்கள். இதனால் வனப்பகுதிகளில் மாடுகளை மேய்ச்சலுக்கு வீடும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், பல தலைமுறைகளாக போடூர் வனப்பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு வளர்த்து வருகிறோம். இதுவரை மாடுகளை வேட்டையாடும் சம்பவங்கள் நடைபெறவில்லை. கொரோனா ஊரடங்கு காலம் தொடங்கியதில் இருந்து வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்படும் மாடுகள் வேட்டையாடப்படும் சம்பவங்கள் நடக்கிறது. இதனால் வனப்பகுதிகளில் மாடுகளை வளர்க்கும் விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். வனத்துறையினர் மூலம் உரிய கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு மாடுகள் வேட்டையாடப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.