திண்டுக்கல் மாவட்டத்தில் வேகமாக பரவுகிறது: கொரோனாவுக்கு ஓட்டல் தொழிலாளி பலி - சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வைரஸ் தொற்றுக்கு வேடசந்தூர் பகுதியை சேர்ந்த ஓட்டல் தொழிலாளி பலியானார்.;

Update: 2020-06-17 22:00 GMT
வேடசந்தூர், 

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வரை மாவட்டத்தில் 249 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் மூதாட்டி உள்பட 3 பேர் பலியானார்கள். 175 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் 67 பேர் கொரோனா பாதிப்புடன் திண்டுக்கல், கரூர், மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் வேடசந்தூர் அருகே எரியோடு ச.புதூரை சேர்ந்த 63 வயது முதியவர், மும்பையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக வேலையின்றி தவித்த அவர், சொந்த ஊருக்கு திரும்ப முடிவு செய்தார். அதன்படி கடந்த வாரம் சிறப்பு ரெயில் மூலம் அவர் தமிழகம் திரும்பினார். இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் வேடசந்தூர் அருகே தண்ணீர்பந்தம்பட்டியில் உள்ள தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவருக்கு இருதயநோய் மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் இருந்தன. இதனால் கவலைக்கிடமான நிலையில் இருந்த அவர், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

இதையடுத்து சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தலின்பேரில் மதுரையிலேயே ஓட்டல் தொழிலாளியின் உடல், உறவினர்களால் அடக்கம் செய்யப்பட்டது.

வேடசந்தூர் பகுதியை சேர்ந்தவர் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பையும், மக்களிடம் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்