போலி ஹாலோகிராம் ஸ்டிக்கர் மோசடி வழக்கு: கலால்துறை அதிகாரியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
புதுவையில் போலி ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டி மோசடி நடந்தது தொடர்பாக கலால்துறை அதிகாரியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
புதுச்சேரி,
புதுச்சேரி வில்லியனூர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் மதுபான ஆலையில் போலி ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டி மோசடி நடப்பதாக புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து கலால் துறை அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் மோசடி செய்து இருப்பது உறுதியானது. உடனே அந்த ஆலைக்கு கலால் துறையினர் சீல் வைத்தனர்.
இதுகுறித்து வில்லியனூர் போலீசார் விசாரித்து வந்த நிலையில் அந்த வழக்கு சி.பி. சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர வல்லாட், இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மோசடி செய்த மதுபான ஆலையின் பொது மேலாளர் பொன்னாராவ் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த மோசடி தொடர்பாக கலால்துறை வருவாய் ஆய்வாளர் அருண் பிரசாத்திடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அப்போது அவர் எனக்கும் இந்த மோசடிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆட்கள் இல்லாதபோது அங்கு தவறு நடந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இதில்தொடர்புடைய முக்கிய குற்றவாளியான மதுபான ஆலை உரிமையாளர் சேகர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் முன்ஜாமீன் கேட்டு சேகர் சார்பில் புதுவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு சி.பி.சி.ஐ.டி. தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முன்ஜாமீன் பெறுவதற்கு முன்பாக சேகரை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.