கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை மத்திய அரசு வழங்க வேண்டும் - சுகாதார மந்திரி ராஜேஷ் தோபே வலியுறுத்தல்

மராட்டியத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என சுகாதார மந்திரி ராஜேஷ் தோபே வலியுறுத்தி உள்ளார்.

Update: 2020-06-17 22:30 GMT
மும்பை,

மராட்டியத்தில் 1 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை இந்த வைரஸ் நோய்க்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்தநிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருந்துகளை வழங்கும்படி மத்திய அரசுக்கு மராட்டிய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழிகாட்டுதல்படி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன்படி கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டிசிவிர் மற்றும் டோசிலிசுமாப் மருந்துகள் வழங்கப்படுகிறது.

இப்போது இந்த மருந்துகள் அதிக எண்ணிக்கையில் தேவைப்படுகிறது. மத்திய அரசு அந்த மருந்துகளை நியாயமான விலையில் வழங்க வேண்டும். மேலும் மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கு கூடுதலாக 500 வென்டிலேட்டர்களையும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்