வேலைக்கு வராமல் இழுத்தடிக்கும் ஊழியர்கள் 72 மணி நேரத்தில் ஆஜராகாவிட்டால் பணி நீக்கம் - மும்பை மாநகராட்சி எச்சரிக்கை
பணிக்கு வராமல் இழுத்தடிக்கும் ஊழியர்கள் 72 மணி நேரத்தில் ஆஜராகாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என மும்பை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்து உள்ளது.
மும்பை,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதி தீவிரமாக பரவி வருவதை தொடர்ந்து கடந்த மார்ச் இறுதி வாரம் முதல் ஊடரங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. சுமார் 3 மாதமாக தொடர்ந்து ஊரடங்கினால் அத்தியாவசிய பணிகளை தவிர மற்றவை நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஊடரங்கு தளர்வு காரணமாக மும்பையில் கடந்த 1-ந் தேதி முதல் அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.
மேலும் அரசு மற்றும் அரசு சார்ந்த ஊழியர்கள் செல்ல வசதியாக கடந்த 15-ந்தேதி முதல் மின்சார ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
இருப்பினும் மும்பை மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் இன்னும் பணிக்கு சேராமல் இருந்து வருவதாக மாநகராட்சி பொது நிர்வாக துறைக்கு புகார் வந்தது.
இந்த புகாரின் படி மாநகராட்சி வெளியிட்ட சுற்றறிக்கையில், 55 வயதுக்கு உட்பட்ட அனைத்து ஊழியர்களும் 72 மணி நேரத்தில் தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பணியில் சேராமல் இழுத்தடிக்கும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மாநகராட்சி கூடுதல் கமிஷனர் மிலிந்த் சாவந்த் கூறுகையில், பணிக்கு வராமல் உள்ள ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதை நான் வரவேற்கிறேன். மும்பையில் உள்ள மாநகராட்சி அலுவலகங்களில் வெறும் 38 சதவீதம் ஊழியர்கள் மட்டுமே இதுவரை பணிக்கு திரும்பி உள்ளனர்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஊழியர்கள் பணிக்கு வர இயலாத காரணத்தை தெரிவித்து அதற்கான மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.