கள்ளக்காதலுக்கு இடையூறு: மகளை கொன்ற பெண்ணுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை - ஊட்டி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளை கொன்ற பெண்ணுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊட்டி மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2020-06-17 23:06 GMT
ஊட்டி, 

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள பிங்கர்போஸ்ட் பகுதியில் சரஸ்வதி(வயது 29) என்பவர் தனது கணவரை பிரிந்து, 5 குழந்தைகளுடன் வசித்து வந்தார். அதில் ஒரு மகள் திரிஷா(4). இந்த நிலையில் சரஸ்வதிக்கும், அதே பகுதியை சேர்ந்த சில ஆண்களுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி சரஸ்வதி தனது மகள் திரிஷா மயக்கம் அடைந்து இருப்பதாகக்கூறி ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்தார். உடனே பரிசோதனை நடத்திய டாக்டர்கள், திரிஷா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஊட்டி நகர மேற்கு போலீசார் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதன்பிறகு வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில், கட்டையால் தாக்கப்பட்டு திரிஷா கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சரஸ்வதியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கட்டையால் அடித்து திரிஷாவை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து சரஸ்வதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று அந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது நீதிபதி முரளிதரன், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக பெற்ற மகளையே கொலை செய்த சரஸ்வதிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். வழக்கில் அரசு வக்கீல் மாலினி ஆஜரானார். பின்னர் போலீசார் பலத்த பாதுகாப்புடன் சரஸ்வதியை கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். சரஸ்வதிக்கு பிறந்த மற்ற 4 குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்