நெதர்லாந்தில் இருந்து சென்னைக்கு பார்சலில் வந்த ரூ.12 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் மாணவர் கைது

நெதர்லாந்தில் இருந்து சென்னைக்கு பார்சலில் வந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இதுதொடர்பாக ஆந்திராவைச் சேர்ந்த கல்லூரி மாணவரை கைது செய்தனர்.

Update: 2020-06-17 22:30 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்ககப்பிரிவுக்கு விமானத்தில் வரும் பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது நெதர்லாந்து நாட்டில் இருந்து ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஒரு முகவரிக்கு பார்சல் ஒன்று வந்திருந்தது. அந்த பார்சலின் மேல் பகுதியில் விளையாட்டு பொம்மைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால் அந்த பார்சல் மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அந்த பார்சலை பிரித்து பார்த்தனர். அதில் விளையாட்டு பொம்மைகளுக்கு பதிலாக ‘மெத்தோ பெட்டமின்’ என்ற ஒருவகை போதை மாத்திரைகள் இருந்ததை கண்டுப்பிடித்தனர். ரூ.12 லட்சம் மதிப்புள்ள 450 கிராம் எடையில் 400 போதை மாத்திரைகள் பச்சை, மஞ்சள், பிங்க் ஆகிய நிறங்களில் இருந்தன.

கல்லூரி மாணவர் கைது

அந்த போதை மாத்திரைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்தனர். அதில், ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமாவரம் ஊரைச்சேர்ந்த ஒருவர் இணையதளம் மூலமாக பதிவு செய்து போதை மாத்திரைகளை வரவழைத்தது தெரிந்தது. சுங்க இலாகா அதிகாரிகள் ஆந்திரா சென்று பார்சலில் உள்ள முகவரியில் விசாரணை நடத்தினர்.

அதில் அங்குள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் 27 வயது மாணவர்தான் இந்த போதை மாத்திரைகளை வரவழைத்து இருப்பது தெரிந்தது. இளம்வயதில் போதைக்கு அடிமையாகி, கல்லூரி படிப்பையும் பாதியில் நிறுத்தி விட்டதும் தெரிந்தது. தடை செய்யப்பட்ட இணையதளத்தை பயன்படுத்தி இந்த போதை மாத்திரைகளை வரவழைத்து உள்ளார்.

இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் கல்லூரி மாணவரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். அவர் மீது போதை மாத்திரைகளை சட்டவிரோதமாக வரவழைத்தது, தடை செய்யப்பட்ட இணையதளத்தை பயன்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்