மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி கார் டிரைவரிடம் ரூ.4½ லட்சம் மோசடி - நெய்வேலி கணினி மைய உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி கார் டிரைவரிடம் ரூ.4½ லட்சம் மோசடி செய்த நெய்வேலி கணினி மைய உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
விருத்தாசலம் தாலுகா கொடுக்கூர் மேற்குதெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகன் சங்கர் (வயது 38). கார் டிரைவர். இவர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்வை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.
அதில் நான் கடந்த 2018-ம் ஆண்டு நெய்வேலியில் உள்ள கணினி மையத்திற்கு சென்றேன். அங்கிருந்த அதன் உரிமையாளர் மந்தாரக்குப்பம் பாலாஜிநகரை சேர்ந்த ஜோதி மகன் பிரவீன்குமார் (32) என்பவர் தனது நண்பரான வடக்குசேப்ளாநத்தம் காமராஜ்நகரை சேர்ந்த வெங்கடாசலம் (46) மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினார்.
அதற்கு ரூ.9 லட்சம் வரை செலவாகும் என்றும், ஆனால் முன்பணமாக ரூ.5 லட்சம் தர வேண்டும் என்றார். இதை உண்மை என்று நினைத்த நான், பிரவீன்குமார், வெங்கடாசலத்திடம் பேசி, அவர்கள் கூறியபடி வெங்கடாசலம் பெயரில் 2 தவணையாக ரூ.5 லட்சத்தை வங்கி மூலம் செலுத்தினேன். ஆனால் அவர்கள் எனக்கு அரசு வேலை வாங்கி தரவில்லை. இதனால் பணத்தை திருப்பி கேட்டேன். அதன்பிறகு 2 பேரும் எனது வீட்டுக்கு வந்து ரூ.50 ஆயிரம் மட்டும் திருப்பி தந்தனர். மீதி ரூ.4½ லட்சத்தை தரவில்லை. பின்னர் நெய்வேலி கணினி மையத்திற்கு சென்று பிரவீன்குமார், வெங்கடாசலம் ஆகிய 2 பேரிடமும் பணத்தை திருப்பி தருமாறு கேட்டேன். அதற்கு அவர்கள் பணத்தை தர முடியாது. மீறி கேட்டால் கூலிப்படையை ஏவி கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர். ஆகவே மோசடி செய்த 2 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், இதுபற்றி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 2 பேரும் சேர்ந்து மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து பிரவீன்குமார், வெங்கடாசலம் ஆகிய 2 பேரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதில் வெங்கடாசலம் தற்போது பால் வியாபாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.