மாவட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கடலூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிதம்பரம்,
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் மத்திய அரசு ரூ.7 ஆயிரத்து 500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். அனைத்து வீடுகளிலும் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் தெற்கு சன்னதி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். இதில் நிர்வாகி செந்தில் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. தற்போது சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள 4 மாவட்டங்களுக்கு மட்டும் ஊரடங்கு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த திட்டம் மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். சென்னையில் கொரோனா தாக்குதலில் சாவு எண்ணிக்கையை சொல்ல அரசு தயங்குகிறது. எனவே தமிழக அரசு வெளிப்படைத்தன்மையோடு செயல்படவேண்டும்.
கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து என்ன உண்மையோ அதை மக்களுக்கு பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகள், தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் அனைத்தையும் அரசாங்கம் கையகப்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்கான செலவை தனியார் மருத்துவமனைகளுக்கு அரசாங்கம் காப்பீட்டு தொகை மூலமாகவோ, அரசு நிதி மூலமாகவோ நேரடியாக வழங்க வேண்டும். இதை செயல்படுத்தினால் தான் சாவு எண்ணிக்கையை குறைக்க முடிவதோடு, நோய் பரவலை தடுக்க முடியும் என்றார்.
இதேபோல் கடலூர் ஜவான்ஸ்பவன் சாலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மருதவாணன், நகர செயலாளர் அமர்நாத், மாவட்டக்குழு உறுப்பினர் முத்துக்குமாரசாமி ஆகியோர் சமூக இடைவெளியை கடைபிடித்து பங்கேற்றனர்.
கடலூர் ஒன்றியம் செம்மங்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு கிளை செயலாளர் வேலன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்பையன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆளவந்தார், கிளை செயலாளர் கோபிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் காரைக்காடு ரேஷன் கடை முன்பு கிளை செயலாளர் விஜயராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் பண்ருட்டி, விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.