மதுரை பரவை மார்க்கெட்டில் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை
பரவை மார்க்கெட்டில் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
மதுரை,
தென் மாவட்டங்களுக்கு மதுரை பரவை ஒருங்கிணைந்த மொத்த காய்கறி மார்க்கெட்டில் இருந்து தான் காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது. இந்த மார்க்கெட் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மிகுந்த பரபரப்பாக செயல்படும். வெளிமாவட்டத்தில் இருந்து அதிகமான வியாபாரிகள் இங்கு வருவதால் எப்போதும் நெருக்கடி அதிக அளவில் இருக்கும். கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து மதுரை பரவை மார்க்கெட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இருப்பினும் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியவில்லை.
இதற்கிடையில் சென்னையில் கொரோனா உச்சம் பெறுவதற்கு அங்குள்ள கோயம்பேடு மார்க்கெட் முக்கிய காரணியாக திகழ்ந்தது. எனவே அதுபோன்ற நிலை மதுரையில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கை எடுத்தது.
அதன்படி பரவை மார்க்கெட்டில் இருந்து சில கடைகள் பாத்திமா கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டன. மேலும் அங்கிருந்த கடைகள் அனைத்து காய்கறிகள் வாரியாக அங்குள்ள மைதானத்திற்கு பிரிக்கப்பட்டன. கலெக்டர் வினய், கமிஷனர் விசாகன் ஆகியோர் தினமும் மார்க்கெட்டில் ஆய்வு செய்து சமூக இடைவெளி கடைபிடிக்காத கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் தொடர்ச்சியாக மாநகராட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தினமும் மார்க்கெட்டில் ஆய்வு செய்தனர்.
இதற்கிடையில் கடந்த 1-ந் தேதி முதல் ஊரடங்கில் மேலும் தளர்வு அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பரவை மார்க்கெட்டில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. சமூக இடைவெளி மாயமானது. வியாபாரிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. யாரும் முக கவசம் அணிவதில்லை.
இந்தநிலையில் பரவை மார்க்கெட்டில் 2 வியாபாரிகள் மற்றும் 2 சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் என 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கு கொரோனா தொற்று பரவியது. இதனைத்தொடர்ந்து பரவை மார்க்கெட் மூடப்பட்டது. பரவை மார்க்கெட் மூடப்பட்டது என்று சொன்னாலும் அந்த வளாகம் மட்டுமே மூடப்பட்டு அங்குள்ள காலி மைதானத்தில் காய்கறி விற்பனை நடக்கிறது. இருப்பினும் தற்போதும் அங்கு சமூக இடைவெளி கடைப்பிடிக்கவில்லை. இந்த நிலை நீடித்தால் சென்னை கோயம்பேடு போல் பரவை மார்க்கெட் மாறி விடும் என்று சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் பரவை காய்கறி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள், சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் மார்க்கெட்டிற்கு வந்து சென்ற வியாபாரிகள் என 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்து உள்ளனர். இதற்காக பணிகளையும் அவர்கள் தொடங்கி உள்ளனர். இந்த சோதனை முடிவுகள் வெளிவந்தவுடன் தான் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற முழு விவரம் தெரியவரும்.