6 மாவட்டத்தை சேர்ந்த ஊரக வளர்ச்சித்துறை கணினி உதவியாளர்கள் திருச்சியில் காத்திருப்பு போராட்டம்

6 மாவட்டத்தை சேர்ந்த ஊரக வளர்ச்சித்துறை கணினி உதவியாளர்கள் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2020-06-17 00:38 GMT
திருச்சி,

திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் 200-க்கும் மேற்பட்ட கணினி உதவியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். மகாத்மாகாந்தி தேசிய ஊரக 100 நாள் வேலைஉறுதி திட்டத்தின்கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளங்களை கணக்கிட்டு வழங்கும் பணியை அவர்கள் செய்து வருகிறார்கள்.

தமிழக அரசு, கணினி உதவியாளர்களுக்கு தேர்வு வைத்து நிரந்தர பணி வழங்கப்படும் என அரசு கடந்த 2017-ம் ஆண்டு சுற்றறிக்கை அனுப்பியது. ஆனால், 3 ஆண்டுகளை கடந்தும் எவ்வித தேர்வும் அரசு வைக்கவில்லை. ஊரக வளர்ச்சித்துறை கணினி உதவியாளர் சங்கத்தினர் பணிநிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போராடி வருகிறார்கள்.

காத்திருப்பு போராட்டம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் 6 மாவட்டங்களில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை கணினி உதவியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று மாலை திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் திரண்ட அவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் சமூக விலகலை கடைப்பிடித்தவாறு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு மாநில தலைவர் ரவி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 2014-ம் ஆண்டு முதல் கணக்கிட்டு ஆண்டுதோறும் ஊதிய உயர்வினை நிலுவைத்தொகையுடன் வழங்க வேண்டும் என்றும், வருங்கால வைப்பு நிதி மற்றும் மருத்துவ காப்பீடு உள்ளிட்ட சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர். இந்த போராட்டம் இரவு 7 மணிக்கு பின்னரும் தொடர்ந்தது.

மேலும் செய்திகள்