308 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் குறைந்தது
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 308 நாட்களுக்கு பிறகு 100 அடிக்கும் கீழ் குறைந்தது.
மேட்டூர்,
தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன நீர் ஆதாரமாக மேட்டூர் அணை திகழ்கிறது. 120 அடி உயரம் கொண்ட இந்த அணையின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
பொதுவாக அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால், அடுத்து வரும் தென்மேற்கு பருவமழையை கருத்தில் கொண்டு, டெல்டா பாசனத்துக்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். இதன் மூலம் குறுவை, சம்பா, தாளடி என முப்போக சாகுபடிக்காக ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை சுமார் 330 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்படும். (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி).
கடந்த ஆண்டு ஜூன் மாதம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, நீர் இருப்பு போதிய அளவில் இல்லாததால் அணையில் இருந்து குறித்த நாளில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. 2 மாதம் தாமதமாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணை நீர்மட்டம் 100 அடியாக இருந்தது.
அதே நேரத்தில் பருவமழை காரணமாக கடந்த ஆண்டு மேட்டூர் அணை அடுத்தடுத்து 4 முறை நிரம்பியது. மேலும் அணையில் இருந்து சாகுபடிக்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி நிறுத்தப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் ஜனவரி மாதம் இறுதி வரை காவிரி டெல்டா பாசனத்துக்காக சுமார் 150 டி.எம்.சி.க்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது.
மேலும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி முதல் நேற்று முன்தினம் (ஜூன் மாதம் 15-ந் தேதி) வரை தொடர்ந்து 308 நாட்களுக்கு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் குறையாமல் இருந்தது. அதே நேரத்தில் இந்த ஆண்டு அணையில் போதிய நீர் இருப்பு காரணமாக கடந்த 12-ந் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வழக்கம் போல் திறக்கப்பட்டது.
இதன் காரணமாக அணையில் நீர் இருப்பு கடந்த 4 நாட்களாக படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் குறைந்து 99.64 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 210 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று வினாடிக்கு 2 ஆயிரத்து 600 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.