நெல்லையில் 32 இடங்களில் கொரோனா தடுப்பு உதவி மையங்கள் - ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் பொதுமக்களுக்கு பரிசோதனை
நெல்லையில் 32 இடங்களில் கொரோனா தடுப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு ‘தெர்மல் ஸ்கேனர்‘ மூலம் பொதுமக்கள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது.
நெல்லை,
நெல்லை மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய ஆங்காங்கே மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவும் வேகம் அதிகரித்து உள்ளது.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து நெல்லைக்கு வருபவர்களால் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகி கொண்டே செல்கிறது. அவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் மாயமாகி விட்டனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் மாயமாகி விட்டதாக தகவல்கள் வெளியாகின.
அவர்களை தேடும் பணியில் சுகாதார அலுவலர்கள் ஈடுபட்டு உள்ளனர். கொரோனா நோயாளிகள் கொடுத்த முகவரி, செல்போன் எண்கள் போலியானவை என தெரிகிறது. தொடர்ந்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் பிடிபட்டனர். அவர்களை அதிகாரிகள் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
ஆனால், 200-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மாவட்டங்களில் ஊடுருவி விட்டதாக தெரிகிறது. அவர்களை தேடும் பணியை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
தடுப்பு உதவி மையம்
இந்த நிலையில் கொரோனா தொற்று விரைவு மருத்துவ குழு மற்றும் உதவி மையம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி கொரோனா தடுப்பு உதவி மையங்கள் முதற்கட்டமாக மாநகராட்சி பகுதியில் நேற்று அமைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, பரவலை தடுக்க தீவிர நடவடிக்கையாக நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவின்பேரில், மாநகராட்சி நல அலுவலர் சதீஷ்குமார் மேற்பார்வையில் கொரோனா தடுப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நெல்லை மாநகராட்சியை பொறுத்த வரையில் நெல்லை, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளன.
மண்டலம் வாரியாக அமைப்பு
நெல்லை மண்டலத்தில் பெரிய தெரு, செக்கடி பஸ் நிறுத்தம், டி.எம்.சி. காலனி, வையாபுரி நகர், காட்சி மண்டபம் உள்ளிட்ட 6 இடங்களிலும், பாளையங்கோட்டை மண்டலத்தில் மேரி ஆர்டன் பள்ளி, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில், பாளையங்கோட்டை பஸ் நிலையம், ராம் பாப்புலர் ரோடு, பெல்பின்ஸ் பள்ளி முன்பு, கே.டி.சி. நகர், மகராஜநகர் ரவுண்டானா, கோபாலசாமி கோவில் முன்பு ஆகிய 8 இடங்களிலும் கொரோனா தடுப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளன.
தச்சநல்லூர் மண்டலத்தில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம், தச்சநல்லூர் பாலர்வாடி பள்ளி முன்பு, கொக்கிரகுளம், செல்லப்பாண்டியன் சிலை அருகே, கைலாசபுரம் அம்மா உணவகம் அருகில் உள்ளிட்ட 10 இடங்களில் உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளன. மேலப்பாளையம் மண்டலத்தில் பெருமாள்புரம் அன்பு நகர், வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில், மேலப்பாளையம் வாட்டர் டேங்க், வி.எஸ்.டி. பள்ளிவாசல் அருகில், அண்ணா தெரு, நெல்லை புதிய பஸ்நிலையம், மேலப்பாளையம் வாய்க்கால் பாலம் அருகில், குறிச்சி மாநகராட்சி பள்ளி அருகில் ஆகிய 8 இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.
32 இடங்களில்...
நெல்லை மாநகர பகுதியில் மொத்தம் 32 இடங்களில் கொரோனா தடுப்பு உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த வழியாக வரும் பொதுமக்களை நிறுத்தி ‘தெர்மல் ஸ்கேனர்‘ மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் கொரோனா தொற்று பற்றி விளக்கம் அளிக்கப்படுகிறது. காய்ச்சல் அதிகமாக இருந்தால் அவர்கள் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஒரு மையத்துக்கு 2 மாநகராட்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பரிசோதனை செய்து கொண்டவர்களின் விவரங்களை விண்ணப்பங்கள் மூலம் பூர்த்தி செய்தனர்.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள மருத்துவ உதவி மையத்தை நெல்லை மாநகராட்சி சுகாதார அலுவலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன், முருகன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த மையம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். நேற்று மட்டும் இந்த உதவி மையம் மூலம் ஏராளமானவர்களுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்‘ மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.