கடையம் அருகே, பள்ளிவாசல் உண்டியலை உடைத்து பணம் திருட்டு; 2 பேர் கைது

கடையம் அருகே, பள்ளிவாசல் உண்டியலை உடைத்து பணம் திருட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-06-16 00:18 GMT
கடையம், 

கடையம் அருகே சம்பன்குளத்தில் உள்ள பள்ளிவாசலில் கடந்த வாரம் உண்டியலை மர்மநபர்கள் உடைத்து பணத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆழ்வார்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்தநிலையில் நேற்று அவர் சுடலை கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

இதையடுத்து அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி தெற்கு தெருவை சேர்ந்த ராமையா மகன் முருகன் என்ற மெட்ராஸ், செங்கோட்டை கே.சி.ரோட்டை சேர்ந்த முகமது சலீம் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் சம்பன்குளம் பள்ளிவாசலில் உண்டியலை உடைத்து பணம் திருடியதும் தெரியவந்தது. இதில் முருகன் மீது போலீசில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த திருட்டு தொடர்பாக விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த கஞ்சா மகேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்