கொரோனா தடுப்பு நடவடிக்கை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிப்பு
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் கிருமிநானிசி தெளிக்கும் பணி நடைபெற்றது.
விழுப்புரம்,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதாலும், அதனை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு அலுவலகங்களும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தவேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. அதன்அடிப்படையில் மாதத்தில் 2-வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து அரசு அலுவலகங்களும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் மற்றும் அந்த வளாகத்தில் இயங்கும் நிலஅளவைத்துறை, மாவட்ட வழங்கல் அலுவலகம், ஊரக வளர்ச்சித்துறை பிரிவு, தாட்கோ, சமூக நல அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மாவட்ட அலுவலகங்ளுக்கு கடந்த 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதோடு, நகராட்சி பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வந்தது. 2-ம் நாளாக நேற்று கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கம் மற்றும் மற்ற அலுவலகங்களில் உள்ள கணினி, நுழைவுவாயில் கைப்பிடிகள், மேஜைகள், நாற்காலி, கோப்புகள் உள்ளிட்டவைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இந்த பணியை நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், சுத்தம் செய்யும் பணியை விரைந்து முடிக்கவேண்டும் என்று பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்.