மாரண்டஅள்ளி அருகே, லாரி உரிமையாளரின் மகனை கடத்திய 5 பேர் கைது
மாரண்டஅள்ளி அருகே லாரி உரிமையாளரின் மகனை காரில் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள சொக்கன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் நாராயணன், லாரி உரிமையாளர். இவருடைய மகன் பரமேஷ் (வயது 23). இவரை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் காரில் கடத்தி சென்றனர். பின்னர் அவரை சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அந்த மர்மநபர்கள் காரில் இருந்து இறக்கிவிட்டு சென்றுவிட்டனர். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசில் நாராயணன் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வாலிபரை கடத்தியது சேலம் குரங்குச்சாவடியை சேர்ந்த விக்னேஷ் (26), தட்சணாமூர்த்தி (25), ஓமலூர் பழைய வண்டிபேட்டையை சேர்ந்த சக்தி மகேந்திரன் (32), ஜெயா நகரை சேர்ந்த மணிகண்டன் (25), மாரண்டஅள்ளி சொக்கன்கொட்டாய் பகுதியை சேர்ந்த ரத்னவேல் என்கிற ராஜா (33) என்பது தெரியவந்தது.
இதையடுத்து நேற்று அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில் விக்னேஷ் உள்ளிட்ட 5 பேரும் சேலத்தில் லாரி பட்டறை வைத்துள்ளதும், பணத்திற்காக லாரி உரிமையாளரின் மகனான பரமேசை கடத்தியதும் தெரியவந்தது. இந்த கடத்தலுக்கு ரத்னவேல் முக்கிய நபராக செயல்பட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.