கடலூர், விருத்தாசலத்தில் சாராய வியாபாரிகள் 2 பேர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது

கடலூர், விருத்தாசலத்தில் சாராய வியாபாரிகள் 2 பேர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-06-14 22:30 GMT
கடலூர்,

விருத்தாசலம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருந்தா மற்றும் போலீசார் சம்பவத்தன்று கொரக்கவாடியில் சித்தேரி ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 சாக்கு மூட்டைகளுடன் மொபட்டில் வந்தவரை வழிமறித்து, சாக்கு மூட்டைகளை சோதனை செய்தனர். அதில் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மொபட்டில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் கொரக்கவாடி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சின்னசாமி மகன் மூக்கன் (வயது 44) என்பதும், 2 சாக்கு மூட்டைகளில் சாராய பாக்கெட்டுகள் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து மூக்கனை கைது செய்தனர்.

கைதான மூக்கன் மீது விருத்தாசலம் மதுவிலக்கு பிரிவில் 4 வழக்குகள் உள்ளன. இதனால் அவரது தொடர் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, அவரை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து சாராய வியாபாரி மூக்கனை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யும்படி கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார். அதன்படி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூக்கனிடம், அவரை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் பெரியகங்கணாங்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 சாக்கு மூட்டைகளுடன் மோட்டார் சைக்கிளில் வந்தவரை வழிமறித்து, சாக்கு மூட்டைகளை சோதனை செய்தனர். இதில் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் கிழக்கு ராமாபுரத்தை சேர்ந்த பாப்பாத்தி என்கிற தனசேகர்(44) என்பதும், சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளுடன், 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், தனசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைதான தனசேகர் மீது, கடலூர் மதுவிலக்கு போலீஸ் நிலையத்தில் 4 வழக்குகள் உள்ளன. இதனால் இவரின் குற்ற செய்கையை தடுக்கும் வகையில், அவரை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து சாராய வியாபாரி தனசேகரை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யும்படி கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார். அதன்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனசேகரிடம், தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகலை போலீசார் வழங்கினர்.

மேலும் செய்திகள்