அனுமதியின்றி சன்டே மார்க்கெட்டில் திடீரென கடைகள் திறப்பு தடுத்த அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்-பரபரப்பு

அனுமதியின்றி சன்டே மார்க்கெட்டில் திடீரென கடைகள் திறக்கப்பட்டதை தடுத்த அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2020-06-15 06:19 IST
புதுச்சேரி,

புதுவை காந்தி வீதியில் ஞாயிற்றுக்கிழமைகளில் சன்டே மார்க்கெட் இயங்கி வந்தது. இங்கு சென்னை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு உள்பட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்து கடைகள் போடுவது வழக்கம். வீட்டு உபயோகப் பொருட்கள், துணிமணிகள், எலக்ட்ரானிக் சாதனங்கள், கணினி, வாகன உதிரி பாகங்கள் என அனைத்து பொருட்களும் மலிவு விலையில் கிடைக்கும்.

இதனால் இங்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்ல பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். வியாபாரிகளும் பொருட்களை விற்று லாபம் சம்பாதித்து வந்தனர். இந்தநிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சன்டே மார்க்கெட்டில் கடைகள் போட தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 3 மாதங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் சன்டே மார்க்கெட் இயங்கும் காந்தி வீதி வெறிச்சோடி கானப்பட்டது. மத்திய அரசு 5-ம் கட்டமாக ஊரடங்கு பிறப்பித்த போது ஏற்கனவே இருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

இதையடுத்து வணிக வளாகம், கடைகள், ஓட்டல்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஆனால் சன்டே மார்க்கெட்டில் கடைகள் போட அனுமதி அளிக்கப்படவில்லை. இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன் முதல்- அமைச்சர் நாராயணசாமியை சன்டே மார்க்கெட் வியாபாரிகள் சந்தித்து மீண்டும் கடைகள் திறக்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுதொடர்பாக எந்த அறிவிப்பும் அரசு சார்பில் வெளியிடப்படவில்லை.

இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று காலை காந்தி வீதியில் வியாபாரிகள் திடீரென கடைகளை விரித்தனர். இதுபற்றி தெரியவந்ததும் புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமார், தாசில்தார் ராஜேஷ் கண்ணா மற்றும் பெரியகடை போலீசார் விரைந்து வந்து அங்கு கடைபோட்ட வியாபாரிகளை தடுத்து நிறுத்தினர். சன்டே மார்க்கெட்டை திறக்க இன்னும் அரசு சார்பில் அனுமதி வழங்கவில்லை. எனவே கடைகளை உடனே காலி செய்துவிட்டு அங்கிருந்து செல்லும்படி வியாபாரிகளை அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.

அப்போது அங்கிருந்த ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் சேதுசெல்வம், சன்டே மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் பாபு, செயலாளர் துரைசெல்வம், பொருளாளர் தயாளன் ஆகியோர் தலைமையில் வியாபாரிகள் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதன்பின் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகளிடம் வியாபாரிகள் கூறும்போது ‘ஓட்டல், கடைகள், கோவில்கள், வணிக வளாகம் போன்றவற்றை திறக்க அனுமதிக்கும் போது நாங்கள் கடை போடக்கூடாதா? கடன் வாங்கி தான் வியாபாரம் செய்து வருகிறோம். கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்து வருகின்றனர். எங்கள் குடும்பம் பசி, பட்டினியால் வாடுகிறது. கிருமி நாசினி, முகக்கவசம் ஆகியவற்றை பயன்படுத்தி சமூக இடைவெளியை கடைபிடித்து வியாபாரம் செய்ய எங்களை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதை ஏற்க மறுத்ததால் அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தாசில்தார் ராஜேஷ் கண்ணா செல்போன் மூலம் மாவட்ட கலெக்டர் அருணை தொடர்பு கொண்டு பேசினார்.

இதனையடுத்து வியாபாரிகளிடம் பேசிய தாசில்தார் ராஜேஷ் கண்ணா, ‘அடுத்த வாரம் முதல் பல்வேறு நிபந்தனைகளுடன் சன்டே மார்க்கெட் கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் புதுவை வியாபாரிகளை தவிர வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகளுக்கு அனுமதி கிடையாது. இதுதொடர்பாக நாளை (இன்று திங்கட்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் வியாபாரிகள் கலந்து கொள்ள வேண்டும்’ என்றார். அதைத்தொடர்ந்து கடைகளை மூடிவிட்டு வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்