காவிரி டெல்டா பகுதியில் ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரும் பணி 92 சதவீதம் நிறைவு அமைச்சர் காமராஜ் தகவல்

காவிரி டெல்டா பகுதியில் ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரும் பணி 92 சதவீதம் நிறைவடைந்து விட்டது என அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

Update: 2020-06-15 00:24 GMT
குடவாசல்,

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் பிரதாபராமபுரத்தில் வாடகை வேளாண்மை எந்திர மையத்தின் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு திருவாரூர் கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் ஜெயபிரீத்தா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாப்பா.சுப்பிரமணியன், ஒன்றியக்குழு தலைவர் கிளாரா செந்தில், துணைத்தலைவர் தென்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் திட்ட அலுவலர் ஸ்ரீலேகா வரவேற்றார்.

இதில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு வாடகை வேளாண் எந்திர மையத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஜூன் 12-ந்தேதி முதல்-அமைச்சரால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் குறுவை சாகுபடி என்பது விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். விவசாயிகள் குறுவை சாகுபடிக்காக வேலைகளை தொடங்கிட வேண்டும் என்பதற்காக கை டிராக்டர், உழவு உபகரணங்கள், ஸ்பிரேயர்கள் போன்ற வேளாண் உபகரணங்கள் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டு கூட்டமைப்பு மூலம் வாடகை வேளாண் எந்திரம் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தூர்வாரும் பணி

குடவாசல் ஒன்றியத்தில் ஆலத்தூர், நாரணமங்கலம், பிரதாபராமபுரம் ஆகிய 3 இடங்களில் இந்த வாடகை மையம் செயல்படும். இந்த எந்திரங்களை பயன்படுத்தி விவசாய வேலைகளை விரைவாக செய்து வேளாண்மையில் திருவாரூர் மாவட்டம் முன்னோடியாக திகழ முன்வர வேண்டும். கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் நாம் நம்மை பாதுகாக்க வேண்டும்.

இந்தியாவிலேயே தொற்று தமிழகத்தில் அதிகம் இருந்தாலும் இறப்பு சதவீதம் 11-க்கு குறைவாக உள்ளது. காவிரி டெல்டா பகுதியில் ஆறுகள், வாய்கால்களில் தூர்வாரும் பணிகள் 92 சதவீதம் முடிந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி, தாசில்தார் பரஞ்சோதி, முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்