நெல்லையில் இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்
நெல்லையில் இறைச்சி கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
நெல்லை,
நெல்லை மாநகரில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஆங்காங்கே இருந்த இறைச்சி கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டன. பாளையங்கோட்டை பெல் மைதானம், டவுன் ஆர்ச் இணைப்பு சாலை, கண்டியப்பேரி உழவர் சந்தை மற்றும் பேட்டை தியேட்டர் மெயின் ரோடு ஆகிய பகுதிகளுக்கு இறைச்சி கடைகள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டது.
அங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த இறைச்சி வியாபாரிகள் கடைகள் அமைத்து ஆடு, கோழி, மாடு இறைச்சிகள் மற்றும் மீன்களை விற்பனை செய்து வருகிறார்கள்.
அலைமோதிய கூட்டம்
ஞாயிற்றுக்கிழமை என்றாலே இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த நிலையில் நேற்றும் இந்த கடைகளில் கூட்டம் அலைமோதியது. கடைகள் அமைந்துள்ள இடங்களில் மக்கள் கூடி இறைச்சிகளை வாங்கிச்சென்றனர்.
இதனால் அங்கு ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் வந்து நின்றன. சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையொட்டி இறைச்சி, மீன் விலையும் வழக்கத்தை விட நேற்று சற்று கூடுதலாக இருந்தது.