ஆம்புலன்சுக்காக 2 மணி நேரம் காத்திருப்பு

ஆம்புலன்சுக்காக 2 மணி நேரம் காத்திருப்பு.;

Update:2020-06-15 03:30 IST
அரியலூர்,

பணி நிமித்தமாக கத்தார் நாட்டிற்கு சென்றவர்கள் கொரோனா பாதிப்பால் இந்தியாவுக்கு வரமுடியாமல் தவித்து வந்த நிலையில் மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் கடந்த 10-ந் தேதி சென்னை வந்தனர். அங்கு அவர்களுக்கு முதற்கட்ட பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இல்லை என முடிவு செய்யப்பட்டது. இதனால் அவர்கள் பஸ் மூலம் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அரியலூர் மாவட்டம், செந்துறையை சேர்ந்த வீரபாண்டியன்(வயது 38), கீழபழுவூரை சேர்ந்த கமலக்கண்ணன்(36), தாமரைப்பூண்டியை சேர்ந்த சக்திவேல்(30) ஆகிய 3 பேரும் நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காலை 10 மணிக்கு இறக்கி விடப்பட்டனர். மேலும் இவர்களை தனிமை படுத்தும் முகாமுக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வராததால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருந்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, போதுமான ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தினால் இது போன்று தாமதம் ஏற்படுவதாக தெரிவித்தனர். வெளிநாட்டில் இருந்தும் கூட வந்து விட்டோம் ஆனால் தனிமைப்படுத்தும் முகாமுக்கு செல்ல இவ்வளவு காலதாமதம் ஆகும் என எதிர்பார்க்கவில்லை என பயணிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் பிற்பகல் 12.15 மணி அளவில் வந்ததையடுத்து அவர்கள் தனிமை படுத்தும் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மேலும் செய்திகள்