அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க டிஜிட்டல் கற்றல் தான் ஒரே வழி - துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பேச்சு

“அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க டிஜிட்டல் கற்றல் தான் ஒரே வழி” என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்தார்.

Update: 2020-06-14 00:02 GMT
பெங்களூரு,

பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனம் சார்பில் டிஜிட்டல் கல்வியில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

“சமுதாயத்தில் எந்த பேதமும் இல்லாமல் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க ஒரே வழி எது என்றால் அது டிஜிட்டல் முறையில் கற்றல் தான். இதன் மூலம் குக்கிராமங்களில் இருக்கும் மாணவர்களும் தேர்ந்த நிபுணர்கள் எடுக்கும் வகுப்பை கவனிக்க முடியும். அதில் இருந்து அந்த மாணவர்கள் தரமான விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்.

டிஜிட்டல் கல்வி

இதன் மூலம் அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்கும். அதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் நேரத்தை வீணாக்காமல், டிஜிட்டல் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தரமான கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

புதிய கல்வி கொள்கை மூலம் புதிய கல்வி நிறுவனங்கள் தொடங்கவும், தற்போது உள்ள கல்வி நிறுவனங்களில் கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் கல்விக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் உயர்கல்வியில் தரமான கல்விக்கு முக்கியத்துவம் அளித்து ஆன்லைன் மூலம் கல்வி கற்றல் முறை எளிமையாக்கப்படும்.

பிரச்சினைக்கு தீர்வு

டிஜிட்டல் கல்விக்கு சில சவால்கள் உள்ளன. அதனை தீர்க்கவும் அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இணையதள தொடர்பு மற்றும் மொபைல், மடிக்கணினி பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அரசின் நிதி அல்லது தனியார் நிறுவனங்கள் சமூக நலனுக்கு வழங்கும் நிதியை பயன்படுத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். அனைத்து இடங்களிலும் தடையின்றி 4ஜி அலைக்கற்றை இணையதள வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.”

இவ்வாறு அஸ்வத் நாராயண் பேசினார்.

மேலும் செய்திகள்