மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: திருமண நாளில் கோவிலுக்கு சென்ற டாஸ்மாக் மேற்பார்வையாளர் மகனுடன் பலி

லாலாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில், திருமண நாளில் கோவிலுக்கு சென்ற டாஸ்மாக் மேற்பார்வையாளரும், அவரது மகனும் பலியாகினர். மனைவியும், மற்றொரு மகனும் படுகாயமடைந்தனர்.

Update: 2020-06-13 23:30 GMT
லாலாபேட்டை,

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள சிட்டிலரை கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 41). இவர் திருச்சி பெட்டவாய்த்தலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சித்ரா (38). இந்த தம்பதிக்கு நோகிதன் (12), தர்ஷன் (9) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் பாலமுருகன்-சித்ரா தம்பதிக்கு நேற்று திருமண நாளாகும்.

இதனால் பாலமுருகன் தனது குடும்பத்துடன் கரூர் மாவட்டம், குப்புரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார். இதையடுத்து, பாலமுருகன், சித்ரா, நோகிதன், தர்ஷன் ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.

தந்தை-மகன் பலி

திருச்சி-கரூர் தேசியநெடுஞ்சாலையில், லாலாபேட்டையில் உள்ள கருப்பத்தூர் அரசு தொடக்கப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வீடுகளில் கழிவுநீரை அகற்றும் எந்திரம் பொருத்திய மினிலாரி வந்து கொண்டிருந்தது. கண்இமைக்கும் நேரத்தில், மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பாலமுருகன், தர்ஷன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.

சித்ரா, நோகிதன் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் படுகாயமடைந்து கிடந்த சித்ரா, நோகிதனை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். பாலமுருகன், தர்ஷன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

டிரைவருக்கு வலைவீச்சு

இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், விபத்தை ஏற்படுத்தி விட்டு, தப்பியோடிய மினிலாரி டிரைவர் கும்பகோணத்தை சேர்ந்த தினேஷ் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய மினிலாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற தந்தை-மகன் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்