ஏரல் அருகே, மூதாட்டியிடம் 14 பவுன் நகை பறிப்பு

ஏரல் அருகே மூதாட்டியிடம் 14 பவுன் நகையை பறித்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-06-13 07:27 GMT
ஏரல், 

ஏரல் அருகே பண்டாரவிளை மாணிக்கநாடார் தெருவைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவருடைய மனைவி முத்துகிளி வைலட் (வயது 76). இவர்களுக்கு 6 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி, வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.

செல்லத்துரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் முத்துகிளி வைலட் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இதனை நோட்டமிட்ட மர்மநபர் நேற்று முன்தினம் மதியம் முத்துகிளி வைலட்டின் வீட்டுக்கு சென்று கதவை தட்டினார்.

உடனே கதவை திறந்து முத்துகிளி வைலட் வெளியே வந்தார். அப்போது அங்கு நின்ற மர்மநபர் போர்வையால் தனது உடலை போர்த்தி இருந்தார். அவர் திடீரென்று முத்துகிளி வைலட்டின் கழுத்தில் அணிந்து இருந்த மொத்தம் 20 பவுன் மதிப்பிலான 2 தங்க சங்கிலிகளை பிடித்து இழுத்து பறிக்க முயன்றார்.

உடனே சுதாரித்து கொண்ட முத்துகிளி வைலட் தனது நகைகளை கைகளால் இறுக பிடித்து கொண்டு, ‘திருடன்... திருடன்...’ என்று கூச்சலிட்டார். அப்போது அவரது 2 நகைகளில் ஒரு நகை மட்டும் அறுந்து இரு துண்டானது. அதன் ஒரு பகுதியான 6 பவுன் நகை மட்டும் முத்துகிளி வைலட்டின் கையில் இருந்தது.

மற்றொரு 8 பவுன் தங்க சங்கிலியும், அறுந்த தங்க சங்கிலியின் ஒரு பகுதியான 6 பவுன் நகையும் மர்மநபரின் கையில் இருந்தது. மொத்தம் 14 பவுன் நகைகளை பறித்த மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை அக்கம்பக்கத்தினர் விரட்டிச் சென்றும் பிடிக்க முடியவில்லை.

இதுகுறித்த புகாரின்பேரில், ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டியிடம் நகை பறித்த மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். ஏரல் அருகே பட்டப்பகலில் மூதாட்டியிடம் நகை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்