நெல்லையில் வேகமாக பரவுகிறது: ஆஸ்பத்திரி-நகைக்கடை ஊழியர்களுக்கு கொரோனா - செல்போன் கடைக்காரர் குடும்பத்துக்கும் தொற்று உறுதி

நெல்லையில் ஆஸ்பத்திரி மற்றும் நகைக்கடை ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், செல்போன் கடைக்காரர் குடும்பத்துக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2020-06-13 06:49 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஊரடங்கு தளர்வால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மாறி விட்டனர்.

முதலில் டெல்லியில் இருந்து நெல்லை வந்தவர்களுக்கும், இதைத்தொடர்ந்து மும்பை, சென்னையில் இருந்து வந்தவர்களுக்கும் கொரோனா தொற்று காணப்பட்டது. ஆங்காங்கே ஒரு சிலருக்கு மட்டுமே கொரோனா பரவி இருந்தது. இந்த நிலையில் ஊரடங்கு தளர்வு, சகஜ நிலை என்று மாறி விட்டதால் கொரோனா மீண்டும் தலைத்தூக்க தொடங்கி விட்டது.

இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் கொரோனா தற்போது வேகமாக பரவத் தொடங்கி விட்டது. நேற்று முன்தினம் வங்கி மேலாளர், 60 வயது மூதாட்டி ஆகியோருக்கு கொரோனா பரவியது தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்று நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கணக்கு பிரிவில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவர் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதேபோல் டவுனில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் வேலை செய்து வரும் ஊழியருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து அந்த நகைக்கடை உடனடியாக மூடப்பட்டது. அந்த பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் உள்ள ஒரு சலூன் கடைக்காரர் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த நிலையில் அவரது கடைக்கு அருகில் கொக்கிரகுளத்தைச் சேர்ந்த ஒருவர் செல்போன் உதிரி பாகங்கள் கடை நடத்தி வருகிறார். அவருக்கும், அவருடைய மனைவி, மகன் ஆகியோருக்கும் பரிசோதனை செய்ததில், அவர்கள் 3 பேருக்கும் கொரோனா பரவியது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 3 பேரும் நேற்று காலை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மாநகராட்சி களப்பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் கொக்கிரகுளத்துக்கு சென்று சுகாதார பணிகளை மேற்கொண்டனர். அங்கு 3 பேருக்கு கொரோனா பரவியதை அறிந்த அந்த பகுதி மக்கள் உஷார் அடைந்தனர். தங்களது தெருக்களை மூடி, வேப்ப இலைகளை கட்டி தடுப்பு நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் செய்திகள்