கொரோனா அச்சத்தால் கூட்டம் இல்லை: குறைந்த பயணிகளுடன் சென்ற திருச்சி-செங்கல்பட்டு சிறப்பு ரெயில்
கொரோனா அச்சம் காரணமாக திருச்சி-செங்கல்பட்டு சிறப்பு ரெயிலில் குறைந்த அளவிலேயே பயணிகள் பயணம் செய்தனர்.
திருச்சி,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பஸ், ரெயில், விமான போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி முதல் குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மட்டும் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி-செங்கல்பட்டு இடையே வண்டிஎண் 02606/02605 இன்டர்சிட்டி விரைவு சிறப்பு ரெயில் நேற்று முதல் இயக்கப்பட்டது. இந்த ரெயில் திருச்சியில் இருந்து நேற்று காலை 7 மணிக்கு புறப்பட்டு 11.30 மணி அளவில் செங்கல்பட்டை சென்றடைந்தது. முன்னதாக இந்த ரெயிலில் செல்வதற்கு முன்பதிவு செய்திருந்த பயணிகள் நேற்று அதிகாலையிலேயே திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்ட பிறகே ரெயிலில் ஏற அனுமதிக்கப்பட்டனர். கொரோனா அச்சம் காரணமாக பயணிகள் கூட்டம் அதிகமாக இல்லை. இந்த ரெயிலில், குறைந்த அளவிலான பயணிகளே பயணம் சென்றனர். 18 பெட்டிகளில் 30 முதல் 40 பேர் வரை மட்டுமே பயணம் செய்தனர்.
காரணம் என்ன?
இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், “சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. ஆகையால் சென்னை மார்க்கமாக செல்லும் ரெயில்களில் அச்சம் காரணமாக பயணிகள் கூட்டம் குறைவாக இருக்கிறது. இனிவரும் காலங்களில் படிப்படியாக கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது” என்றார்.
இதேபோல் வண்டிஎண் 06795/06796 செங்கல்பட்டு-திருச்சி-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் நேற்று பகல் 2 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு மேல்மருவத்தூர், விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை வழியாக இரவு 8.10 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தடைந்தது. இந்த ரெயில் திருச்சியில் இருந்து மீண்டும் இன்று(சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு புறப்பட்டு தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக பகல் 12.40 மணிக்கு செங்கல்பட்டு சென்று அடையும்.