நாகூர் அருகே, ஊரடங்கை மீறி நடக்க இருந்த கோவில் குடமுழுக்கு தடுத்து நிறுத்தம் - பக்தர்கள் ஏமாற்றம்

ஊரடங்கை மீறி நாகூரில் நடக்க இருந்த கோவில் குடமுழுக்கை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Update: 2020-06-12 22:00 GMT
நாகூர்,

நாகை மாவட்டம் நாகூர் அருகே உள்ள வடக்கு பால்பண்ணைச்சேரியில் முனீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 10 அடி உயரம் உள்ள முனீஸ்வரன் சிலை அமைக்கப்பட்டு வந்தது. இந்த பணிகள் நிறைவடைந்ததையொட்டி நேற்று கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் ஆகியவை நடந்தது.

நேற்று காலை 9 மணிக்கு குடமுழுக்கு நடக்க இருந்தது. இந்த குடமுழுக்கை காண பால்பண்ணைச்சேரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் வந்து இருந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஊரடங்கை மீறி நடக்க இருந்த குடமுழுக்கை தடுத்து நிறுத்தினர்.

இதனால் கோவிலில் குடமுழுக்கு நடைபெறவில்லை. இதனால் அங்கு கூடியிருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதுகுறித்து கோவில் நிர்வாகிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வரும் திருவிழா காலங்களில் குடமுழுக்கை நடத்தி கொள்கிறோம் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஊரடங்கை மீறி குடமுழுக்கு நடக்க இருந்ததும், இந்த குடமுழுக்கை போலீசார் தடுத்து நிறுத்தியதுமான இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்