தீ விபத்தை தடுக்கும் வகையில் தமிழக-கேரள எல்லையில் விரைவில் தீத்தடுப்பு கோடுகள் வனத்துறை அதிகாரி தகவல்
தீ விபத்தை தடுக்கும் வகையில் தமிழக-கேரள எல்லையில் விரைவில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட உள்ளதாக வனத்துறை அதிகாரி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்படும். அப்போது வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள், மலை வாழ் மக்கள் ஆகியோர் சேர்ந்து மலையில் ஏற்பட்ட தீயை அணைப்பது வழக்கம்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் எந்த இடங்களில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது என்பதை அறிந்தும், தீப்பிடித்து மரங்கள் எரியும் பகுதிகளை தேர்வு செய்தும் வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீத்தடுப்பு கோடுகளை அமைத்து உள்ளனர்.
அதேபோல் தற்போது கேரள எல்லையில் தீ விபத்து ஏற்படும் போது தமிழக எல்லைக்குள் தீ பரவாமல் இருப்பதற்காகவும், தமிழக எல்லையில் தீப்பிடிக்கும் போது கேரள எல்லைப்பகுதிக்குள் பரவாமல் இருப்பதற்காகவும் சுமார் 18 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதியின் எல்லையில் தீ தடுப்பு கோடு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
பணிகள் விரைவில் தொடங்கும்
இதுகுறித்து வனத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தீப்பிடிக்கும் இடங்களை தேர்வு செய்து அந்த இடங்களில் இருக்கும் மரங்கள் மற்றும் செடிகளுக்கும் தொடர்பு இல்லாமல் இருக்க குறிப்பிட்ட தூரத்திற்கு அகலமாகவும், நீளமாகவும் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கோடு போல் வெட்டி விடுவோம். இதை தான் தீத்தடுப்பு கோடு என்று அழைப்பர்.
தீப்பிடித்து வரும் போது அருகில் உள்ள செடி, கொடிகள் தொடர்பு இல்லாமல் இருந்தால் தீ விபத்து அந்த தீத்தடுப்பு கோடு அருகே பரவாமல் நின்றுவிடும். இந்த தீத்தடுப்பு கோடுகளை தமிழக-கேரள எல்லையில் அமைக்க உள்ளோம். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். இது மிக அடர்த்தியான வனப்பகுதி ஆகும். இந்த கோடுகள் அமையும் இடத்தில் யானைகள், புலிகள், சிறுத்தைகள் எண்ணற்றவை வசித்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.