கர்நாடகத்தில் புதிய உச்சமாக கொரோனாவுக்கு ஒரே நாளில் 7 பேர் பலி மாநிலத்தில் பேர் எண்ணிக்கை 81 ஆக உயர்வு

கர்நாடகத்தில் நேற்று 271 பேர்களுக்க வைரஸ் தொற்று உறுதியானது. அதோடு மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக கொரோனாவுக்கு ஒரே நாளில் 7 பேர் பலியானார்கள். இதன் மூலம் மாநிலத்தில் சாவு எண்ணிக்கை 81 ஆக உயர்ந்து உள்ளது.

Update: 2020-06-13 00:15 GMT
பெங்களூரு,

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

இந்தியாவில் மராட்டியம், தமிழகத்தில் அதிக அளவில் கொரோனா வைரஸ் தனது தாக்கத்தை தொடுத்துள்ளது. கர்நாடகத்திலும் கொரோனா வைரசின் தாக்குதல் அதிக அளவில் இருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலில் முதல் இடத்தில் இருக்கும் மராட்டிய மாநிலத்திற்கு அண்டை மாநிலமாக கர்நாடகம் உள்ளது.

இதனால் மராட்டியத்தில் வசித்து வரும் ஏராளமான கன்னடர்கள் அங்கிருந்து கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அதேபோல் பிற மாநிலங்களில் வசித்து வரும் கன்னடர்களும் கர்நாடகத்தை நோக்கி வந்து படையெடுத்துள்ளனர். இதனால் கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிக அளவில் இருந்து வருகிறது. கர்நாடகத்தில் இந்த வைரஸ் தொற்று சமூக பரவலை எட்டி விட்டதாக கருதப்படுகிறது. ஆனால் அதை மாநில அரசு மறுத்து வருகிறது.

மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலில் உடுப்பி மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு உள்ளது. மேலும் மாநிலத்தில் கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்பின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை மாநிலத்தில் கொரோனாவுக்கு 74 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரேநாளில் மாநிலத்தில் 7 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியாகி உள்ளனர். அதாவது பெங்களூருவில் 4 பேர், கலபுரகியில் 2 பேர் மற்றும் ஹாசன் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுதவிர நேற்று ஒரேநாளில் 271 பேருக்கு வைரஸ் தொற்று பரவி இருக்கிறது.

மாநிலத்தில் கடந்த 6 நாளில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் 14 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். இதனால் மாநில அரசும், மக்களும் கலக்கம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று வைரஸ் பரவல் குறித்து கர்நாடக அரசின் சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 6,171 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று புதிதாக 271 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 6,442 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் நேற்று கொரோனாவுக்கு 7 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

அதாவது, பெங்களூரு நகரை சேர்ந்த 61 வயது, 65 வயது மூதாட்டிகள், 52 வயது நபர், 49 வயது பெண், ஹாசனை சேர்ந்த 60 வயது முதியவர், கலகபுரகியை சேர்ந்த 53 வயது, 48 வயது நபர்கள் மரணம் அடைந்துள்ளனர். இதன் மூலம் கர்நாடகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 3,440 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று மட்டும் 464 பேர் அடங்குவர். 2,995 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். புதிதாக கொரோனா பாதித்தவர்களில் பல்லாரியில் 97 பேர், பெங்களூரு நகரில் 36 பேர், உடுப்பியில் 22 பேர், கலபுரகியில் 20 பேர், தார்வாரில் 19 பேர், தட்சின கன்னடாவில் 17 பேர், பீதரில் 10 பேர், ஹாசனில் 9 பேர், மைசூருவில் 9 பேர், துமகூருவில் 7 பேர், சிவமொக்காவில் 6 பேர், ராய்ச்சூரில் 4 பேர், உத்தரகன்னடாவில் 4 பேர், சித்ரதுர்கா, ராமநகரில் தலா 3 பேர், மண்டியாவில் 2 பேர், பெலகாவி, விஜயாப்புரா, கோலாரில் தலா ஒருவர் உள்ளனர்.

கர்நாடகத்தில் இதுவரை 4 லட்சத்து 26 ஆயிரத்து 341 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 9 ஆயிரத்து 835 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. 34 ஆயிரத்து 231 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 7 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் பெங்களூருவில் மட்டும் 4 பேர் உள்ளனர். கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தாலும், பலியாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்