காவிரி ஆற்றின் முக்கொம்பு வாத்தலை பகுதியில் 86 ஆண்டுகள் பழமையான பெருவளை வாய்க்கால் பாலம் இடிந்து விழுந்தது போக்குவரத்து துண்டிப்பால் கிராம மக்கள் தவிப்பு
திருச்சி காவிரி ஆற்றின் முக்கொம்பு வாத்தலை பகுதியில் 86 ஆண்டுகள் பழமையான பெருவளை வாய்க்கால் பாலம் இடிந்து விழுந்தது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.;
கொள்ளிடம் டோல்கேட்,
காவிரி ஆறு, திருச்சி அருகே உள்ள முக்கொம்பு என்ற இடத்தில் காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. முக்கொம்பு மேலணையின் வாத்தலை பகுதியில் காவிரி ஆற்றில் இருந்து பெருவளை வாய்க்கால் என்ற பாசன வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இந்த வாய்க்காலின் மூலம் திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர், சமயபுரம், லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 19 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
இந்த வாய்க்காலில் 4 மதகுகளுடன் கடந்த 1934-ம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக தான் கல்லூர், சித்தாம்பூர் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு நடந்தும், வாகனங்களிலும் செல்ல முடியும். 86 ஆண்டுகள் பழமையான இந்த பாலத்தின் ஒரு பக்க கைப்பிடி சுவர் நேற்று காலை திடீரென இடிந்து விழுந்தது. கைப்பிடி சுவருடன் பாலத்தின் தரை பகுதியும் சிறிது தூரம் பெயர்ந்து விழுந்ததால் போக்குவரத்து தடைபட்டு உள்ளது.
அதிகாரிகள் பார்வையிட்டனர்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருச்சி மண்டல பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பு தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, நடுக்காவேரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் வேட்டை செல்லம், திருச்சி ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட பொறியாளர் பாஸ்கர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்டனர்.
உடனடியாக ஆற்றுக்குள் இடிந்து விழுந்து கிடந்த செங்கல் மற்றும் இடிபாடுகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் உதவியுடன் மதகிற்கு சேதம் ஏற்படாதவாறும், தண்ணீர் தடையின்றி செல்வதற்கு வசதியாகவும் அவை அப்புறப்படுத்தப்பட்டன. பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதால் சுற்று வட்டார கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.
15 நாளில் முடிவடையும்
இது தொடர்பாக தலைமை பொறியாளர் ராமமூர்த்தி கூறுகையில், ‘பெருவளை வாய்க்கால் பாலத்தின் பக்கவாட்டு சுவர் மட்டும் பழமையின் காரணமாக வலுவிழந்து சரிந்து விழுந்து உள்ளது. மதகுகளுக்கு எந்தவித சேதமும் இல்லை. இதனால் காவிரியில் தண்ணீர் திறந்து விட்டாலும் வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுவதற்கு பாதிப்பு வராது. பாலத்தில் பழுதடைந்த பகுதியினை கான்கிரீட் கலவை கொண்டு செப்பனிடும் பணி இரவு, பகலாக நடைபெறும். இன்னும் 15 நாட்களில் இந்த பணி முழுமையாக முடிக்கப்படும்’ என்றார்.