கிருஷ்ணகிரி அருகே, எருதுவிடும் விழாவில் பங்கேற்ற காளையை கல்லால் தாக்கி கொன்ற 3 வாலிபர்கள் - சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோக்களால் பரபரப்பு
கிருஷ்ணகிரி அருகே, எருதுவிடும் விழாவில் பங்கேற்ற காளையை கல்லால் தாக்கி 3 வாலிபர்கள் கொன்றனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகரில் பாப்பாரப்பட்டியில் வசித்து வருபவர் வெற்றிவேல் (வயது 35). இவர் வேப்பனப்பள்ளி ஒன்றியம் சென்னசந்திரம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் காளை ஒன்றை வளர்த்து வந்தார்.
இந்த காளை, பல்வேறு எருதுவிடும் விழாக்களில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது. பாப்பாரப்பட்டி சுடுகாடு அருகே உள்ள தனது நிலத்தில் கொட்டகை அமைத்து, அங்கு காளை மாட்டினை வளர்த்து வந்த வெற்றிவேல், கடந்த 5-ந் தேதி வழக்கம்போல் மாட்டை அங்கிருந்த மரத்தில் கட்டிவைத்து தீவனம் போட்டுவிட்டு பணிக்கு சென்றார்.
பின்னர் அவர் மாலையில் வந்து பார்த்தபோது, காளை கொம்புகள் உடைந்தும், வாய் பகுதியில் ரத்த காயங்களுடனும் இருந்தது. காளை ஆக்ரோஷமாக மரத்தில் தானாக முட்டி காயம் அடைந்திருக்கலாம் என நினைத்த வெற்றிவேல், கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளித்தார்.
கால்நடை மருத்துவர்கள் வந்து அந்த காளைக்கு சிகிச்சையளித்தனர். பின்னர் காளையை சென்னை அல்லது நாமக்கல்லுக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லுமாறு அவர்கள் தெரிவித்தனர். ஆனால் அதற்குள் காளை பரிதாபமாக செத்தது. அதன்பின்னர் உரிய இறுதி சடங்குகள் செய்யப்பட்டு காளை அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் வெற்றிவேலுக்கு வாட்ஸ்-அப் மூலம் வீடியோ ஒன்று வந்தது. அதில், மதுபோதையில் இருந்த வாலிபர் ஒருவர், அமைதியாக இருந்த காளையை ஆக்ரோஷப்படுத்தியதில், காளை மரத்தில் முட்டி அடிபடும் காட்சி இருந்தது. தொடர்ந்து சீண்டிய வாலிபரை முட்ட வரும்போது மரக்கிளையில் சிக்கி காளையின் கொம்புகள் உடைந்து விடுகிறது.
தொடர்ந்து காளையின் வாய், மூக்கு பகுதியில் காயம் அடைந்து ரத்தம் வெளியேறுகிறது. இதனை வாலிபருடன் வந்த மற்ற 2 வாலிபர்கள் செல்போனில் படம் பிடித்து உள்ளனர். சிறிது நேரத்தில் காளை மயக்கமடைந்து கீழே விழுவதை கண்ட வாலிபர் மற்றும் அவருடன் வந்தவர்கள் கல்லால் தாக்கி செல்வதும் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை கண்டு வெற்றிவேல் அதிர்ச்சி அடைந்தார்.
இதில் தொடர்புடைய வாலிபர்கள், அந்த பகுதிக்கு மது குடிக்க வருபவர்கள் ஆவார்கள். அவர்கள் இந்த காளை மாட்டை சீண்டி அதன் மீது கல்லை எறிந்து கோபமூட்டியதும், அந்த காளை அவர்களை முட்ட வரும் நேரத்தில் மரக்கிளையில் சிக்கி, காயம்பட்டு இறந்ததும் தெரிய வந்தது. இதில் தொடர்புடைய நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், மாடுபிடி வீரர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்ப்பிணி யானைக்கு அன்னாசி பழத்தில் வெடி வைத்து கொடுத்து கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தற்போது கிருஷ்ணகிரியில் காளையை வாலிபர்கள் சிலர் துன்புறுத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.