முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில் அண்ணன் உள்பட 4 பேர் கைது - மேலும் 3 பேருக்கு வலைவீச்சு
லத்தேரி அருகே சொத்து தகராறில் முன்னாள் ராணுவ வீரரை கொலை செய்த அண்ணன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
காட்பாடி,
லத்தேரியை அடுத்த கீழ்முட்டுக்கூர் எல்.என்.புரம் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவருடைய மகன்கள் தாமோதரன் (வயது 70) கிருஷ்ணன் (65) ஆகியோர் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. கிருஷ்ணன் முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.
இந்த நிலையில் நேற்று முந்தினம் தாமோதரனும் அவருடைய மகன்களும், பேரன்களும், பொது இடத்தில் கிருஷ்ணன் கட்டிய தண்ணீர் ஏற்றும் அறையை இடித்தனர். இதனை கிருஷ்ணன் தட்டிக்கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த தாமோதரன் மற்றும் அவரது தரப்பினர் கிருஷ்ணனை தடியாலும், கல்லாலும் தாக்கியுள்ளனர். தடுக்க வந்த அவருடைய மனைவி சின்னம்மாவையும் தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கிருஷ்ணனையும் அவருடைய மனைவியையும் அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் இறந்துவிட்டார். அவரது மனைவி சின்னம்மாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பனமடங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். லத்தேரி இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி விசாரணை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் தாமோதரன், அவருடைய மகன்கள் முருகன்(50), காந்தி (45), பாஸ்கர் (39) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட முருகனின் மகன்கள் மோகன்ராஜ் (26), சரண்ராஜ் (22 ), மற்றும் 19 வயது இளைஞர் என 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.