வாணாபுரத்தில், தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை - சாவில் சந்தேகம் என தந்தை புகார்
வாணாபுரத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
வாணாபுரம்,
வாணாபுரத்தை சேர்ந்தவர் சிவனேசன். இவரது மனைவி மோனிஷா (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 9 மாதங்கள் ஆகிறது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிவனேசன் வேலைக்காக துபாய் சென்றுவிட்டார். மோனிஷா மாமனார், மாமியார் மற்றும் நாத்தனாருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மோனிஷா வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். அப்போது அங்கு வந்த சிவனேசனின் பெற்றோர் அவரை மீட்டு வாணாபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மோனிஷாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மோனிஷாவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி வாணாபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதில், எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதன்பேரில் வாணாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் உதயசூரியன் மோனிஷாவின் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மோனிஷாவுக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் திருவண்ணாமலை உதவி கலெக்டர் ஸ்ரீதேவி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.