சென்னையில் இருந்து திருவாரூர் வந்த அரசு ஊழியர் உள்பட 8 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 108 ஆக உயர்வு

சென்னையில் இருந்து திருவாரூர் வந்த அரசு ஊழியர் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-06-11 22:30 GMT
திருவாரூர், 

சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஊர்குடியை சேர்ந்த 34 வயது வாலிபர் பணியாற்றி வந்தார். இவர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கூத்தாநல்லூர் மரக்கடை பகுதிக்கு சென்னையில் இருந்த வந்த 49 வயதுடைய நபருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சென்னையில் அரசு நுகர்பொருள் வாணிபக்கழக சூப்பிரண்டாக பணியாற்றி வந்த 55 வயது நபர் சொந்த ஊரான நாச்சியார்கோவில் திரும்பிய நிலையில் அவருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. செங்கல்பட்டில் ஆட்டோ ஓட்டி வந்த நீடாமங்கலம் ராயபுரத்தை சேர்ந்த நபர், அவருடைய 11 வயது மகன், சென்னையில் இருந்து வந்த மன்னார்குடி அன்னவாசல் பகுதியை சேர்ந்த 44 வயதுடைய கார் டிரைவர், அவருடைய மனைவி, 14 வயது மகன் ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவர்கள் 8 பேரையும் சேர்த்து திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 58 பேர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்