பெரம்பலூரில் மத்திய அரசின் அவசர சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி நகல் எரிப்பு 15 பேர் கைது

பெரம்பலூரில் மத்திய அரசின் அவசர சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி அதன் சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2020-06-11 06:10 GMT
பெரம்பலூர், 

பெரம்பலூரில் மத்திய அரசின் அவசர சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி அதன் சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

போராட்டம்

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955-ல் பல திருத்தங்களை செய்து அதை அவசர சட்டமாக கடந்த 5-ந் தேதி மத்திய அரசிதழில் வெளியிட்டது. இந்த சட்ட திருத்தம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீது மறைமுகமாக கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அதனை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி சட்டநகல்கள் எரிப்பு போராட்டம் மாவட்டங்கள் தோறும் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு விவசாய சங்க மாவட்ட தலைவர் செல்லதுரை தலைமையில் நேற்று போராட்டம் நடந்தது.

15 பேர் கைது

இதில் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம், விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகள் தாமோதரன், ஏ.கே.ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது வேளாண்மை உற்பத்தி பொருட்களின் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் சேவைகள் மீதான அவசர சட்டம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதன் சட்ட நகல்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பெரம்பலூர் போலீசார் எரிந்து கொண்டிருந்த சட்ட திருத்த நகல்களை அணைத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்