திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட 12 பேருக்கு கொரோனா நவல்பட்டில் டாக்டர் தனிமைப்படுத்தப்பட்டார்

திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நவல்பட்டில் டாக்டர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

Update: 2020-06-11 03:58 GMT
மலைக்கோட்டை, 

திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நவல்பட்டில் டாக்டர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

கொரோனா

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருந்தாலும், சென்னையில் இருந்து திருச்சி வந்தவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இந்தநிலையில் திருச்சி பெரியகடைவீதி சின்னசெட்டிதெருவில் வசித்து வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடைய குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மற்றும் 65 வயதுடைய வேலைக்கார பெண் ஆகிய 4 பேரையும் பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். பரிசோதனையில் அவர்கள் 4 பேருக்கும் கொரோனா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட பகுதி

இதன்காரணமாக சின்னசெட்டிதெரு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அந்த தெருவுக்குள் வெளியாட்கள் நுழையாதபடியும், தெருவில் வசித்து வருபவர்கள் வெளியே செல்லாதபடியும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதேபோல் திருச்சி கோட்டை ஜீவாநகர் பகுதியில் வசித்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதே போல,மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று ஊறுதியானாது.

டாக்டர் தனிமைப்படுத்தப்பட்டார்

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் ரத்தம், சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தநிலையில், நவல்பட்டில் உள்ள வட்டார மருத்துவமனையில் வேலை பார்க்கும் டாக்டர் ஒருவர், தனக்கு சொந்தமான நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் உள்ள கிளனிக்கில், துப்பாக்கி தொழிற்சாலை ஊழியருக்கு சிகிச்சை அளித்து வந்ததாக தெரிந்தது.

இதனைத்தொடர்ந்து அந்த டாக்டர் மற்றும் அவரது உதவியாளர் ஆகிய இருவரும் 14 நாட்கள் தங்களது வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் சுகுமார் அறிவுறுத்தியுள்ளார். மேலும், அந்த டாக்டர் கிளனிக் நடத்தி வரும் நவல்பட்டு அண்ணாநகர் பகுதியும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நவீன எந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தொழிலாளி பாதிப்பு

மேலும், திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான்கோட்டையை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கு, கொரோனா அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் இருந்து வந்த அவரது மகள் மூலம் அவருக்கு தொற்று ஏற்பட்டதாக தெரிகிறது.

உப்பிலியபுரம்

சென்னையில் சொந்தமாக லாரி ஓட்டிக்கொண்டிந்த ஒருவர், கடந்த 4 நாட்களுக்கு முன் அங்கிருந்து சொந்த ஊரான உப்பிலியபுரம் அருகே உள்ள சோபனபுரம் வந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையொட்டி அவர் வசித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்