காய்ச்சலால் யாரும் பாதிக்கப்பட்டுள்ளார்களா? கொரோனா அறிகுறியை கண்டறிய வீடு, வீடாக கணக்கெடுக்கும் பணி மாநகராட்சி கமிஷனர் தகவல்
கொரோனா அறிகுறியை கண்டறிய மதுரை மாநகராட்சி பகுதியில் வீடு, வீடாக கணக்கெடுக்கும் பணி நடந்து வருவதாக மாநகராட்சி கமிஷனர் விசாகன் தெரிவித்துள்ளார்.
மதுரை,
மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட நாராயணபுரம், தண்டல் முத்துகோன் தெரு, யாதவர் தெரு, கோகலே தெரு, எம்.ஐ.ஜி. காலனி ஆகிய பகுதிகளை சேர்ந்த 238 குடும்பங்களுக்கும், திருப்பாலை, விஸ்வநாததாஸ் நகரை சேர்ந்த 300 குடும்பங்களுக்கும் என மொத்தம் 538 குடியிருப்புகளுக்கு மாநகராட்சி சார்பில் வீடு வீடாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் மாத்திரைகள், ஜிங்க் மாத்திரைகள், கபசுர குடிநீர் பொடிகள், ஓமியோபதி மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதை மாநகராட்சி கமிஷனர் விசாகன் வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, மதுரை மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் வைட்டமின் மாத்திரைகளை வீணாக்காமல் சாப்பிட வேண்டும். காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத்திணறல் போன்றவை ஏதேனும் இருந்தால் உடனடியாக மாநகராட்சியின் தகவல் மையத்தை 8428425000 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் மருத்துவ அறிவுரை மற்றும் பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தங்கள் பகுதியில் வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து யாரேனும் வருகை புரிந்து இருந்தால் அந்த எண்ணில் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
கணக்கெடுப்பு பணி
தற்போது மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக யாரேனும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார்களா என கணக்கெடுப்பு பணி வீடு வீடாக நடந்து வருகிறது. இந்த பணியில் 31 மாநகராட்சி டாக்டர்கள், 155 நர்சுகள், 530 களப்பணியாளர்கள் என மொத்தம் 716 பேர் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் 155 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி நகர்நல அலுவலர் வினோத்ராஜா, மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், சுகாதார அலுவலர்கள் ராஜ்கண்ணன், சுகாதார ஆய்வாளர் அலாவுதீன், உதவி பொறியாளர் கிருஷ்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.