பயன்பாடற்ற நிலையில் உள்ள மாநகராட்சி கட்டிடம் சமுதாய கூடமாக மாற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருச்சியில், பயன்பாடற்ற நிலையில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தை சமுதாய நல கூடமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Update: 2020-06-11 03:35 GMT
திருச்சி,

திருச்சியில், பயன்பாடற்ற நிலையில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தை சமுதாய நல கூடமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

பாழடைந்த கட்டிடம்

திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டம் 44-வது வார்டை சேர்ந்தது, ஒத்தக்கடை குதுப்பா பள்ளம். சுங்கம் மற்றும் கலால் வரித்துறை ஆணையர் அலுவலகம் மற்றும் குடியிருப்புகளுக்கு நேர் பின்புறம் அமைந்துள்ள இந்த பகுதியில் அரசின் சீர் மரபினர் மாணவர் விடுதியின் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான வளாகம் உள்ளது. இந்த வளாகத்தின் ஒரு பகுதியில் தற்போது ரேஷன் கடை மட்டும் இயங்கி வருகிறது.

இதுதவிர தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டம் என்ற பெயர் பலகையை தாங்கியுள்ள ஒரு கட்டிடம் எப்போதும் பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது. இதன் அருகில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஒரு கட்டிடம் திறப்பு விழா காணாமலேயே மூடி கிடக்கிறது. இதன் பின்னால் ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளால் கூரை வேயப்பட்ட ஒரு பாழடைந்த கட்டிடமும் உள்ளது.

சமூக விரோதிகளின் கூடாரமா?

கடந்த 2005-06-ம் நிதியாண்டில் அப்போது திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த எல்.கணேசன் எம்.பி.யின் உள்ளூர் வளர்ச்சி திட்ட நிதியின் மூலம் இந்த வளாகம் கட்டப்பட்டதாக அங்குள்ள கல்வெட்டு தகவல் கூறுகிறது. இந்த வளாகத்தில் உள்ள பாழடைந்த கட்டிடம் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்கி வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்த வளாகத்தின் ஒரு பகுதி மதில் சுவர் உடைக்கப்பட்டு இருப்பதால் தோட்டக்கழிவுகள் மற்றும் குப்பை கூளங்களும் கொட்டப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் குப்பை மேட்டின் ஒரு பகுதியில் இருந்த குப்பைகள் மட்டும் அள்ளி செல்லப்பட்டது. கட்டிடத்தின் பக்கவாட்டிலும் பின் பகுதியில் உள்ள குப்பைகள் இன்னும் அப்படியே தான் உள்ளன.

குடியிருப்பு பகுதியின் மைய பகுதியில் மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில் இருந்து கூப்பிடும் தூரத்தில் இப்படி ஒரு கட்டிடம் பயன்பாடற்ற நிலையில் இருப்பதை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் என தெரியவில்லை.

முன்னாள் கவுன்சிலர்

இதுதொடர்பாக மாநகராட்சி 44-வது வார்டின் முன்னாள் கவுன்சிலர் ஹேமா கூறுகையில், ‘இந்த வளாகத்தில் பயன்பாடற்ற நிலையில் உள்ள கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தி விட்டு பெரிய அளவில் ஒரு சமுதாய நல கூடம் கட்டினால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாநகராட்சிக்கும் வருவாய் கிடைக்கும். நான் மாமன்ற உறுப்பினராக இருந்தபோது பல முறை இதனை வலியுறுத்தி பேசி இருக்கிறேன். ஆனால் இன்று வரை எனது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை’ என்றார்.

இந்த பகுதியில் குடியிருந்து வரும் லெனின் என்பவர் கூறுகையில், ‘இந்த வளாகத்தின் ஒரு பகுதியை மாநகராட்சி ஊழியர்களே மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து எடுப்பதற்காக பயன்படுத்தினார்கள். நாளடையில் அப்படியே விட்டுவிட்டதால் இந்த வளாகம் முழுவதும் குப்பை மேடாக மாறிவிட்டது. குப்பை அடிக்கடி தீ பிடித்து எரிகிறது. ஆகவே, இங்குள்ள குப்பைகள் முழுவதையும் முதலில் அப்புறப்படுத்த வேண்டும். அதன் பின்னர் பயன்பாடற்ற கட்டிடத்தை சீரமைத்து மாநகராட்சி வார்டு அலுவலகமாகவோ அல்லது நூலகமாகவோ மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

மகளிர் சுய உதவி குழு தலைவி

இந்த பகுதியில் உள்ள மகளிர் சுய குழு தலைவி பிரேமா, ‘இரவு நேரத்தில் இந்த பகுதியில் பெண்கள் நடமாட முடியவில்லை. அந்த அளவிற்கு சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. ஆகவே, பல ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் இந்த கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்’ என்றார்.

இந்த வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மாடியில் சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்காக சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளன. அதுவும் தற்போது பயன்பாட்டில் இல்லாமல் செயலற்ற நிலையிலேயே காணப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருச்சி நகரின் பல்வேறு பகுதிகள் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டத்தில் இந்த பயன்பாடற்ற கட்டிடங்களையும் அப்புறப்படுத்தி பயனுள்ள கட்டிடங்களை கட்ட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்