டாக்டர் தம்பதியிடம் நகை பறித்தவர்களை பிடிக்கச்சென்ற போலீஸ்காரரை அரிவாளால் வெட்டியவர் தூக்கில் பிணமாக தொங்கினார்

தஞ்சையில், டாக்டர் தம்பதியிடம் நகை பறித்தவர்களை பிடிக்க சென்ற போலீஸ்காரரை அரிவாளால் வெட்டியவர் தூக்கில் பிணமாக தொங்கினார்.

Update: 2020-06-11 03:11 GMT
தஞ்சாவூர்,

தஞ்சையில், டாக்டர் தம்பதியிடம் நகை பறித்தவர்களை பிடிக்க சென்ற போலீஸ்காரரை அரிவாளால் வெட்டியவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை எடுத்துச்செல்ல விடாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டாக்டர் தம்பதி

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்தவர் மணிமாறன்(வயது 53). இவர், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணி புரிந்து வருகிறார். இவருடைய மனைவி சுதா(47). இவர், அதே மருத்துவக்கல்லூரியில் பேராசிரியையாக பணி புரிந்து வருகிறார்.

கடந்த 7-ந் தேதி இரவு 9 மணி அளவில் இவர்கள் வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு பிள்ளையார்பட்டி-அம்மன்பேட்டை புறவழிச்சாலையில் சென்றனர். வண்ணாரப்பேட்டை கல்லணைக்கால்வாய் பாலம் அருகே காரை நிறுத்திவிட்டு கணவன்-மனைவி இருவரும் காரை விட்டு கீழே இறங்கினர். பின்னர் பாலத்தில் அமர்ந்து காற்றுவாங்கியபடி பேசிக்கொண்டு இருந்தனர்.

நகை-பணம் பறிப்பு

அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 3 பேர், திடீரென டாக்டர் தம்பதியினரை கத்தியை காட்டி மிரட்டி பாலத்திற்கு கீழே அழைத்து சென்றனர். அங்கு மணிமாறனை பீர்பாட்டிலால் தாக்கிவிட்டு அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியையும், சுதாவை தாக்கி அவரது கழுத்தில் கிடந்த 6¼ பவுன் சங்கிலியையும், அவர்களிடம் இருந்த ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்தையும் பறித்துக்கொண்டு 3 பேரும் தப்பிச்சென்று விட்டனர். காயம் அடைந்த கணவன்-மனைவி இருவரும் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன், முத்துக்குமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு

இந்த நிலையில் தஞ்சையை அடுத்த மானோஜிப்பட்டி அன்னை சிவகாமி நகரை சேர்ந்த சதீஷ் என்பவரது வீட்டில் நகைபறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் நேற்று காலை சதீஷ் வீட்டை சுற்றி வளைத்தனர். போலீசாரை பார்த்தவுடன் அந்த பகுதி பெண்கள் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் எதிர்ப்பையும் மீறி போலீசார் வீட்டிற்குள் சென்று அங்கிருந்தவர்களில் 2 பேரை பிடித்தனர். மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர். தப்பியோட முயன்றவர்களை பிடிக்க முயன்றதுடன் ஏற்கனவே பிடிபட்ட 2 பேரை வேனில் ஏற்ற முயன்றனர். அப்போது அவர்களில் ஒருவன் திடீரென தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் போலீஸ்காரர் கவுதமனின் வலது காலில் வெட்டி விட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பியோடி விட்டான். இதனையடுத்து மற்ற போலீசார், வெட்டுப்பட்ட கவுதமனை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

தீவிர விசாரணை

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கவுதமன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரிவாள் வெட்டுப்பட்ட கவுதமன், தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிடிபட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம் கொங்கணாபாளையத்தை சேர்ந்த செல்வத்தை போலீசார் ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ்காரர் வெட்டப்பட்ட தகவல் அறிந்தவுடன் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன், இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், செங்குட்டுவன் மற்றும் போலீசார் மானோஜிப்பட்டிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தப்பியோடிய 3 பேரை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூக்கில் பிணமாக தொங்கினார்

இந்த நிலையில் ரெட்டிப்பாளையம் பேய்வாரியில் உள்ள புங்கை மரத்தில் ஆண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதாக தகவல் பரவியது. இதை அறிந்த கள்ளப்பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், போலீஸ்காரரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்ற மானோஜிப்பட்டி பொதிகை நகர் மொங்கமேடு பகுதியை சேர்ந்த மணி என்கிற மணிகண்டன்(46) என்பது தெரிய வந்தது.

போலீசாரின் விசாரணைக்கு பயந்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். மேலும் தாசில்தார் வெங்கடேஸ்வரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

உடலை எடுக்க விடாமல் போராட்டம்

அப்போது மணியின் உறவினர்கள், அதிகாரிகளை சூழ்ந்து நின்று மணியின் சாவில் மர்மம் உள்ளது. அவர் தற்கொலை செய்யவில்லை எனவும், போலீசாரே அவரை அடித்துக்கொன்று தூக்கில் தொங்க விட்டுள்ளனர் எனவும் புகார் தெரிவித்ததுடன் உடலை எடுத்து செல்லவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மணியன் உடலை எடுத்துச்செல்ல அவரது உறவினர்கள் சம்மதித்தனர். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.

இந்த சம்பவத்தால் தஞ்சையில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்