மத்தியஅரசை கண்டித்து விவசாயிகள் சட்ட நகல் எரிப்பு போராட்டம்
மத்திய அரசை கண்டித்து விவசாயிகள், சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
தஞ்சாவூர்,
மத்திய அரசை கண்டித்து விவசாயிகள், சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
தஞ்சை ரெயிலடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நேற்றுகாலை நடந்தது. இதற்கு மாநில செயலாளர் சாமி.நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில், அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955-யை மாற்றி அரிசி, பருப்பு, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் அவசியம் இல்லை என்று அறிவித்து மக்கள் வயிற்றில் அடிக்கும் அவசர சட்டம் 2020-யை ரத்து செய்ய வேண்டும். வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம், விவசாயிகளின் விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்த அவசர சட்டம் மற்றும் மின்சார ஒழுங்குமுறை சட்டம்-2020 ஆகியவை விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் சட்டங்களாகும். எனவே இந்த சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
சட்ட நகல் எரிப்பு
இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் முனியாண்டி, ஞானமாணிக்கம், குருசாமி, மாலதி உள்பட பலர் கலந்து கொண்டு, உணவு பொருட்களை அததியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் மத்தியஅரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.பின்னர் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து உணவு பொருட்களை நீக்கிய மத்தியஅரசின் சட்டதிருத்த நகலை விவசாயிகள் கிழித்து எறிந்ததுடன், தீ வைத்து எரிக்கவும் செய்தனர்.
திருவையாறு
இதேபோல் திருவையாறு தாசில்தார் அலுவலகம் முன்பு சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு விவசாய சங்க மாவட்ட பொருளாளர் பழனியய்யா தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் ராம், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பிரதீப்ராஜ்குமார், ஒன்றிய செயலாளர் செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டு சட்ட நகலை எரிக்க முயன்றபோது திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டா ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர் அகிலா, அப்பர் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.