கூடலூர் அருகே மழையால் சேறும், சகதியுமாக மாறிய சாலை கிராம மக்கள் அவதி
கூடலூர் அருகே மழையால் சேறும், சகதியுமாக சாலை மாறியதால் கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
கூடலூர்,
கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தேவர்சோலை பேரூராட்சியில் மூலசெருமுள்ளி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 80 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குற்றிமூற்றி பகுதியில் இருந்து மூலசெருமுள்ளி வழியாக தேவர்சோலைக்கு மண் சாலை செல்கிறது. இதனை கோடை காலத்தில் எந்தவித சிரமமும் இன்றி கிராம மக்கள், மாணவ-மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மழைக்காலத்தில் சாலை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. அப்போது கடும் அவதியடைய நேரிடுகிறது. இதற்கிடையில் மண் சாலையை தார்ச்சாலையாக மாற்றி தர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக நீண்ட காலமாக மழைக்காலத்தில் சேறு, சகதியில் நடந்து சென்று வருகின்றனர்.
சேறும், சகதியுமாக...
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மூலசெருமுள்ளி சாலை வழக்கம்போல் சேறும், சகதியுமாக மாறிவிட்டது. அதில் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் பல்வேறு சிரமங்களுக்கு இடையே நடந்து செல்கின்றனர்.சில சமயங்களில் வழுக்கி கீழே விழுகின்றனர்.
இது தவிர நோயாளிகள், கர்ப்பிணிகளை அவசர காலங்களில் ஆஸ்பத்திரிக்கு விரைவாக வாகனங்களில் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் வாகனங்களை கூட கிராமத்துக்குள் கொண்டு வர முடியாத நிலை ஏற்படுவதால், அவர்களை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவல நிலையும் காணப்படுகிறது.
நேரடி ஆய்வு
இதுகுறித்து மூலசெருமுள்ளி கிராம மக்கள் கூறியதாவது:-
மழைக்காலத்தில் சேறும், சகதியுமாக மாறும் மண் சாலையில் கடும் அவதிப்பட்டு நடந்து செல்ல வேண்டி உள்ளது. எப்போது கீழே தவறி விழுவோமோ? என்ற நிலை காணப்படுகிறது. மேலும் அவசர காலங்களில் நோயாளிகளை விரைவாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடியாமல் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே மண் சாலையை மாற்றி தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆண்டுதோறும் எங்களது அவல நிலை தொடர்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடியாக வந்து ஆய்வு செய்து, தார்ச்சாலை அமைக்காவிட்டாலும், சோலிங்கற்களாவது பதித்து தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.