உற்பத்தி பாதியாக குறைந்தது: ஊரடங்கு தளர்விலும் தீப்பெட்டி தொழில் மந்தம்

ஊரடங்கு தளர்விலும் கோவில்பட்டி பகுதியில் தீப்பெட்டி தொழில் மந்தமாகவே உள்ளது.

Update: 2020-06-11 01:15 GMT
கோவில்பட்டி, 

ஊரடங்கு தளர்விலும் கோவில்பட்டி பகுதியில் தீப்பெட்டி தொழில் மந்தமாகவே உள்ளது.

தீப்பெட்டி உற்பத்தி தொழில்

கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 120-க்கும் மேற்பட்ட பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. மேலும் 600-க்கும் மேற்பட்ட தீக்குச்சி நிறுவனங்களும் உள்ளன. தீப்பெட்டி உற்பத்தி தொழிலில் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலும் பெண்களே தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றனர்.

கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள், தற்போது ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டு செயல்படுகின்றன. தொழிலாளர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் பணியாற்றி வருகின்றனர்.

பாதி சம்பளம்

ஊரடங்குக்கு முன்பாக, தீப்பெட்டி தொழிற்சாலைகளில் அனைத்து வேலைநாட்களிலும் தொழிலாளர்கள் பணியாற்றியதால், வாரந்தோறும் ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரையிலும் சம்பளம் வழங்கப்பட்டது. இதேபோன்று மருந்துக்குள் முக்கிய தீக்குச்சிகளை பெட்டிக்குள் அடைக்கும் நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு வாரந்தோறும் ரூ.1,200 முதல் ரூ.1,300 வரையிலும் சம்பளம் கிடைத்தது.

ஊரடங்கு தளர்வை தொடர்ந்து, தற்போது தீப்பெட்டி தொழிற்சாலைகளில் வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு சுழற்சி முறையில் பணி வழங்கப்படுவதால், பாதி சம்பளமே கிடைக்கிறது. மேலும் உற்பத்தி செய்த தீப்பெட்டிகளையும் அனைத்து மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை உள்ளது.

மந்தம்

ஊரடங்குக்கு முன்பாக, கோவில்பட்டியில் இருந்து தினமும் 60 முதல் 70 லாரிகளில் வெளிமாநிலங்களுக்கு தீப்பெட்டி லோடு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வில் தினமும் சுமார் 30 லாரிகளில் தீப்பெட்டி லோடு வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு பண்டலில் 600 தீப்பெட்டிகள் வீதம், மொத்தம் 4,700 பண்டல்களை லாரியில் லோடு ஏற்றி அனுப்பி வைக்கின்றனர்.

ஊரடங்கு தளர்வில், தீப்பெட்டி ஏற்றுமதி பாதியாக குறைந்ததால், தீப்பெட்டி உற்பத்தி தொழில் மந்தமாகவே நடைபெறுவதாக தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து நேஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் பரமசிவம் கூறியதாவது:-

மூலப்பொருட்கள் விலை உயர்வு

கோவில்பட்டி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகளை பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைத்து வருகிறோம். எனினும் ஊரடங்கு தொடர்வதால், சில மாநிலங்களுக்கு தீப்பெட்டிகளை அனுப்பி வைக்க முடியவில்லை. ஊரடங்குக்கு முன்பாக, பெரும்பாலும் வெளிமாநிலங்களில் உள்ள நிறுவனங்களுக்கு கடனுக்கே தீப்பெட்டிகளை விற்பனை செய்து வந்தோம். தற்போது அந்த நிலுவைத்தொகையை வசூலிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, தற்போது விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும் தீப்பெட்டிகளுக்கான பணத்தை உடனுக்குடன் பெற்று விடுகிறோம்.

தீப்பெட்டிக்கு தேவையான மூலப்பொருட்களும் விலை உயர்ந்துள்ளது. தீக்குச்சி தயாரிக்க தேவையான மரங்கள் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து வந்தோம். தற்போது அங்கிருந்து மரங்களை கொள்முதல் செய்ய இயலாததால், சுவீடன், ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். மேலும் ஊரடங்குக்கு முன்பு, வெளிமாநிலங்களில் இருந்து ரூ.3,800-க்கு கொள்முதல் செய்த தீக்குச்சிகளை தற்போது ரூ.4,500 முதல் ரூ.4,700 வரை கொள்முதல் செய்கிறோம். தீக்குச்சி தயாரிக்க தேவையான மெழுகினை ஈரான் நாட்டில் இருந்து அதிக விலைக்கு கொள்முதல் செய்கிறோம்.

கடனுதவி

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில், தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு அடமானம் இல்லாமல் கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும் இன்னும் தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கப்படவில்லை. தீப்பெட்டி உற்பத்தி தொழிலுக்கு புத்துயிரூட்டும் வகையில், வெளிநாடுகளுக்கு தீப்பெட்டி ஏற்றுமதி செய்யும்போது வழங்கப்படும் 2 சதவீத மானியத்தை 10 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

தீக்குச்சி தயாரிக்க தேவையான மரங்களை வெளிநாடுகளில் இருந்து தமிழக அரசின் சிட்கோ நிறுவனம் மூலம் கொள்முதல் செய்து, தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு வழங்க வேண்டும். தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்ட கடனை திருப்பி செலுத்துவதற்கு வழங்கப்பட்ட 6 மாத கால அவகாசத்துக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்