கோவையில் 77 நாட்களுக்கு பிறகு தனியார் பஸ்கள் ஓடின
கோவையில் 77 நாட்களுக்கு பிறகு தனியார் பஸ்கள் ஓடின. இதனால் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு பயணம் செய்தனர்.
கோவை,
நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ரெயில்கள், பஸ்கள், ஆட்டோ, டாக்சி உள்ளிட்டவை இயக்கப்பட வில்லை.
இந்த நிலையில் 68 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக தமிழகம் 8 மண்டலமாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதில் 8-வது மண்டலத்தில் உள்ள சென்னையில் பஸ்கள் இயக்கப்படவில்லை. பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டு, கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.
தனியார் பஸ்கள்
அரசு பஸ்கள் இயக்கப்பட்ட போதிலும் தமிழகத்தில் தனியார் பஸ்களை எதுவும் இயக்கப்படவில்லை. இந்த நிலையில் சென்னையை தவிர்த்து தமிழகம் முழுவதும் தனியார் பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி கோவையில் 77 நாட்களுக்கு பின்னர் நேற்று முதல் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன.
இதற்காக அனைத்து பஸ்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் பயணிகள் தங்களது கைகளை சுத்தம் செய்ய கண்டக்டர்கள் கிருமிநாசினி வழங்கினர். இதையடுத்து கண்டக்டர் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கினர்.
கோவை காந்திபுரம், உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து கிராமப்புற பகுதிகள், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை உள்ளிட்ட இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து அமர்ந்து இருந்தனர். கோவையில் நேற்று 3-ல் ஒரு தனியார் பஸ் மட்டுமே இயக்கப்பட்டது.
கிருமி நாசினி
இதுகுறித்து தனியார் பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகி துரைகண்ணன் கூறும்போது, கோவையில் மொத்தம் 330 தனியார் பஸ்கள் உள்ளன. இதில் சுமார் 100 பஸ்கள் மட்டும் நேற்று இயக்கப்பட்டது. பயணிகள் வருகை, வருமானம் ஆகியவற்றை கணக்கிட்டு 2 நாட்களுக்குள் அனைத்து தனியார் பஸ்களும் இயக்கப்படும். ஒவ்வொரு முறை பயணத்தின் போதும் தனியார் பஸ்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து இருக்கையில் அமர வேண்டும் என்று கூறியுள்ளோம் என்றார்.