பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உடல் குப்பை தொட்டியில் வீச்சு

சென்னையை அடுத்த குரோம்பேட்டை, மும்மூர்த்தி நகரில் உள்ள குப்பை தொட்டியில் நேற்று காலை பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் உடல் கிடந்தது.

Update: 2020-06-11 00:29 GMT
தாம்பரம்,

குழந்தை உடலை நாய்கள் கடித்து குதறியபடி இருந்தன. இதை பார்த்த அந்த பகுதி மக்கள், நாய்களை விரட்டிவிட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், குப்பை தொட்டியில் கிடந்த குழந்தையின் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நாய்கள் கடித்து குதறியதால் அந்த குழந்தை ஆணா, பெண்ணா என்பது தெரியவில்லை. குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரி அருகிலேயே அந்த பகுதி அமைந்துள்ளது. குழந்தையின் உடலை வீசிச் சென்றது யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் சென்னை பெரம்பூர் ராகவன் சாலையில் உள்ள குப்பை தொட்டி அருகே நேற்று மதியம் நாய் ஒன்று குரைத்தபடி எதையோ இழுத்து கொண்டிருந்தது. அதை கண்ட அப்பகுதி மக்கள் அருகில் சென்று பார்த்தனர். அங்கு 5 மாத கரு ஒன்று அட்டை பெட்டியில் வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த கருவை அங்கு வீசி சென்றது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்