நெல்லை- தென்காசி மாவட்டங்களில் தனியார் பஸ்கள் ஓடத்தொடங்கின குறைந்த எண்ணிக்கையில் இயக்கம்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று முதல் தனியார் பஸ்கள் ஓடத்தொடங்கின. ஆனால், குறைந்த எண்ணிக்கையிலேயே இந்த பஸ்கள் இயக்கப்பட்டன.

Update: 2020-06-11 00:45 GMT
நெல்லை, 

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று முதல் தனியார் பஸ்கள் ஓடத்தொடங்கின. ஆனால், குறைந்த எண்ணிக்கையிலேயே இந்த பஸ்கள் இயக்கப்பட்டன.

கொரோனா வைரஸ்

கொரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி பஸ், ரெயில், விமான போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட 5-வது கட்ட ஊரடங்கில் கூடுதலாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களை தவிர்த்து பொது போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளித்தது. அதன்படி மாவட்டங்கள் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மண்டலத்துக்குள் மட்டும் 60 சதவீத பயணிகளுடன் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்கிய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் நெல்லை கோட்டத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் அனைத்து பயணிகளுக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. கிருமி நாசினி கொண்டு கை கழுவப்பட்டது. பஸ் டிரைவர், கண்டக்டர் உள்பட பயணிகளும் முக கவசம் அணிந்துள்ளனர். நாகர்கோவில் செல்லும் பயணிகள் மட்டும் ஆதார் அட்டையை வைத்து படிவத்தை நிரப்பி கொடுத்த பிறகு பஸ்சில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முதல் தனியார் பஸ்கள் இயக்கப்படும். அதிக கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. அரசு விதிகளின்படி பஸ்கள் இயக்கப்படும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று மாநிலம் முழுவதும் தனியார் பஸ்கள் ஓடத் தொடங்கின.

குறைந்த எண்ணிக்கை

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று குறைந்த எண்ணிக்கையில் தான் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து இடிந்தகரை, திருச்செந்தூர், கூத்தங்குழி, சங்கரன்கோவில் ஆகிய ஊர்களுக்கு மட்டுமே தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல் தென்காசியில் இருந்து ராஜபாளையம் உள்ளிட்ட நீண்ட தூரம் செல்லக்கூடிய ஊர்களுக்கு ஒரு சில தனியார் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. பஸ்களில் பயணிகள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்தனர். மேலும் 32 பயணிகள் மட்டுமே ஏற்றப்பட்டனர்.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 174 தனியார் பஸ்கள் உள்ளன. இதில் 25-க்கும் குறைவான பஸ்களே இயக்கப்பட்டன. இதனால் சில ஊர்களுக்கு தனியார் பஸ் போக்குவரத்தே இல்லை என்ற நிலை ஏற்பட்டது. உடனே போக்குவரத்து அதிகாரிகள், தனியார் பஸ் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது விரைவில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

மாநகர பகுதிகளில்...

நெல்லை மாநகர பகுதியில் முன்பு ஏராளமான தனியார் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. மேலும் நெல்லை, பாளையங்கோட்டை அருகே உள்ள கிராம பகுதிகளுக்கும் ஏராளமான தனியார் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால், நேற்று தனியார் டவுன் பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை.

தனியார் டவுன் பஸ்களில் 60 சதவீதத்திற்கு குறைவான பயணிகளை ஏற்றினால் நஷ்டம் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு தனியார் பஸ் உரிமையாளர்கள், பஸ்களை இயக்க முன்வரவில்லை என்று பேசப்பட்டது.

மேலும் செய்திகள்