மும்பை ஆஸ்பத்திரிகளில் இருந்து கொரோனா நோயாளிகளின் உடல்கள் காணாமல் போனதா? மாநகராட்சி மறுப்பு
மும்பை மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் இருந்து கொரோனாவால் இறந்த நோயாளிகளின் உடல்கள் காணாமல் போனதாக கூறப்படும் குற்றச்சாட்டை மாநகராட்சி மறுத்துள்ளது.
மும்பை,
மும்பை மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் இருந்து கொரோனாவால் இறந்த நோயாளிகளின் உடல்கள் காணாமல் போனதாக கூறப்படும் குற்றச்சாட்டை மாநகராட்சி மறுத்துள்ளது.
நோயாளிகள் மாயம்
மும்பை காந்திவிலி பகுதியை சேர்ந்த 80 வயது நோயாளி ஒருவர் அங்குள்ள சதாப்தி ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தார். அங்கு அவர் திடீரென காணாமல் போனார். பின்னர் போரிவிலி ரெயில் நிலையம் அருகே அவர் பிணமாக மீட்கப்பட்டார்.
இதேபோல காட்கோபர் ராஜவாடி மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி ஒருவர் காணாமல் போனார். அவர் இதுவரை கண்டறியப்படவில்லை.
நோயாளிகள் காணாமல் போனது தொடர்பாக மேயர் கிஷோரி பெட்னேகர் விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும் அவர் சதாப்தி ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்தார்.
மாநகராட்சி மறுப்பு
அப்போது ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிடவும், இது–போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்யும்படியும் டாக்டர்களிடம் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில், மும்பையில் உள்ள கே.இ.எம்., சயான், டிராமா கேர், நாயர், சதாப்தி, ராஜவாடி ஆஸ்பத்திரிகளில் இருந்து கொரோனாவால் இறந்த 6 நோயாளிகளின் உடல்கள் காணாமல் போனதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. ஆனால் அதை மாநகராட்சி மறுத்து உள்ளது.
இதில் 5 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்–ளது. இதுபற்றி அவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் உதவியுடன் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.