பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் விதை சுத்திகரிப்பு நிலையம் விரைந்து முடிக்க வேளாண் உற்பத்தி ஆணையர் அறிவுறுத்தல்
பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்டுவரும் விதைசுத்திகரிப்பு நிலைய பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங்பேடி அறிவுறுத்தியுள்ளார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்டுவரும் விதைசுத்திகரிப்பு நிலைய பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங்பேடி அறிவுறுத்தியுள்ளார்.
ஆய்வு
பெரம்பலூர் மாவட்டம், ஆலம்பாடி ஊராட்சி சொக்கநாதபுரத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை வாயிலாக ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் விதை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சேமிப்பு கிடங்கு கட்டுமானப்பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தா முன்னிலையில் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது:- பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந் தேதி அன்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் உழவர்கள் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கப்பட்டது. 170 விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது 1,008 உறுப்பினர்களுடன் செயல்படுகிறது. 500 ஆண்கள் மற்றும் 508 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதில் 792 சிறு குறு விவசாயிகளும், மற்றும் 36 சதவீத ஆதிதிராவிட இன விவசாயிகளும் உள்ளனர். 27 கிராமங்களில் 54 குழுக்கள் செயல்படுகிறது.
விரைந்து முடித்து...
உழவர்கள் உற்பத்தியாளர் நிறுவனம் அரசு திட்டங்களின் வாயிலாக நிதியுதவி பெற்று ரூ.60 லட்சம் மதிப்பில் விதை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சேமிப்பு கிட்டங்கியும், ரூ.15 லட்சத்து 40 ஆயிரத்தில் பருப்பு ஆலையும் அமைத்து வருகிறது. இந்நிறுவனமானது விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம், வயல்வெளி பயிற்சி, கண்டுணர்வு சுற்றுலா, விவசாய இடுபொருட்கள் உற்பத்தி மற்றும் வினியோகம், விவசாய உற்பத்தி பொருட்களை கொள்முதல் செய்து மொத்த விற்பனை செய்தல், இயற்கை விவசாய பொருட்களை மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைபடுத்துதல், பாரம்பரிய நெல், மஞ்சள் இயற்கை முறையில் உற்பத்தி மற்றும் சந்தைபடுத்துதல், இயற்கை வெல்லம் உற்பத்தி, 14 வகையான பாரம்பரிய அரிசி விற்பனை ஆகியன மேற்கொண்டு வருகின்றது.தற்போது கட்டப்பட்டு வரும் விதைசுத்திகரிப்பு நிலையம் மற்றும் சேமிப்பு கிட்டங்கி கட்டுமானப்பணிகளை விரைந்து முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது வேளாண் இணை இயக்குனர் கணேசன், துணை இயக்குனர் சிங்காரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பூவலிங்கம், துணை இயக்குனர் ஏழுமலை, வேளாண்மை அலுவலர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.