ஊத்துக்குளி அருகே வடமாநில தொழிலாளர்களிடம் செல்போன் பறிப்பு 2 பேர் கைது
ஊத்துக்குளி அருகே வடமாநில தொழிலாளர்களிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யபட்டனர்.
ஊத்துக்குளி
ஊத்துக்குளி பகுதியில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஊத்துக்குளி ஆர்.எஸ். பகுதியில் வசிக்கும் உத்தரபிரதேசம், கோரக்பூர் பகுதியை சேர்ந்த அஜய் சிங் மகன் ஆகாஷ்குமார்(22), அவரது நண்பர் சிட்கோ முதலிபாளையம் பகுதியில் வசிக்கும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராம்தேவன் யாதவ் மகன் ஜெயந்த் பிரகாஷ் யாதவ்(22) ஆகிய இருவரும் எஸ்.பெரியபாளையம் பகுதியில் சாலையோரம் நடந்து சென்றனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஆசாமிகள் இருவரையும் மிரட்டி ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
2 பேர் கைது
இந்த நிலையில் நேற்று ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார் சிட்கோ பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.பின்னர் போலீசார் தீவிரமாக விசாரித்த போது இருவரும் வடமாநில தொழிலாளர்களை மிரட்டி செல்போன்களை வழிப்பறி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். கைதான அவர்கள் திருப்பூர் பாலக்காடு 3-வது வீதி தஞ்சை நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலபதி மகன் பாஸ்கர் (22) என்பதும், திருப்பூர் மண்ணரை சத்யா காலனி ரேவதி தியேட்டர் பின்புறம் உள்ள பழனிகுமார் என்பவரது மகன் ஸ்ரீநாத் (22) என்பதும் தெரியவந்தது. இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். கைதான 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.